நாமக்கல்லில்`பர்கர்' சாப்பிட்ட கல்லூரி மாணவருக்கு உடல்நலம் பாதிப்புஅரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை


நாமக்கல்லில்`பர்கர் சாப்பிட்ட கல்லூரி மாணவருக்கு உடல்நலம் பாதிப்புஅரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை
x
தினத்தந்தி 21 Sept 2023 12:30 AM IST (Updated: 21 Sept 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon
நாமக்கல்

நாமக்கல்லில் சவர்மா சாப்பிட்ட 14 வயது சிறுமி பலியான சம்பவத்தை தொடர்ந்து தற்போது `பர்கர்' சாப்பிட்ட கல்லூரி மாணவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

பள்ளி மாணவி சாவு

நாமக்கல்லில்- பரமத்தி சாலையில் ஐவின்ஸ் என்ற பெயரில் துரித வகை உணவு தயாரிக்கும் ஓட்டல் செயல்பட்டு வந்தது. கடந்த 16-ந் தேதி இந்த ஓட்டலில் சவர்மா, கிரீல் சிக்கன் உள்ளிட்ட உணவு வகைகளை சாப்பிட்ட நாமக்கல் சந்தைப்பேட்டை புதூரை சேர்ந்த 14 வயது பள்ளி மாணவி கலையரசி 18-ந் தேதி காலை உயிரிழந்தார். மேலும் ஒரு கர்ப்பிணி உள்பட 53 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டு அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதையடுத்து ஓட்டலுக்கு `சீல்' வைத்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஓட்டல் உரிமத்தையும் ரத்து செய்தனர். இதுதொடர்பாக ஓட்டல் உரிமையாளர் நவீன்குமார் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் `பர்கர்' சாப்பிட்ட கல்லூரி மாணவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நலமுடன் உள்ளார்

நாமக்கல் நல்லிபாளையம் பகுதியை சேர்ந்த பரமேஸ்வரன் மகன் சஞ்சய் (18). இவர் கோவையில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு சேலம் சாலையில் உள்ள துரித உணவகம் ஒன்றில் நண்பர் ராகுல் என்பவருடன் சென்று `பர்கர்' சாப்பிட்டுள்ளார்.

நேற்று காலையில் அவருக்கு வயிற்றுபோக்கு ஏற்பட்டது. இதையடுத்து அவர் நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவர் தற்போது நலமுடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதற்கிடையே இந்த ஓட்டலில் `பர்கர்' சாப்பிட்ட மேலும் சிலர் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியதாக வதந்தி பரவியது.

வாய்ப்பு இல்லை

இதுகுறித்து நாமக்கல் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் டாக்டர் அருணிடம் கேட்டபோது, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் அனைத்து துரித உணவு தயாரிக்கும் ஓட்டல்களிலும் சோதனை நடத்தி பழைய இறைச்சி, நாள்பட்ட உணவு போன்றவற்றை பறிமுதல் செய்து அழித்தனர்.

எனவே மாணவர் சஞ்சய் `பர்கர்' சாப்பிட்டதால் உடல்நிலை பாதிக்க வாய்ப்பு இல்லை. அவர் நேற்று முன்தினம் காலை, மதியம் எடுத்த உணவு என்ன? அவர் எங்கே சாப்பிட்டார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றார்.


Next Story