சிந்தாதிரிப்பேட்டையில் மழைநீர் வடிகால் பணியின்போது 3 கடைகள் இடிந்து விழுந்தன


சிந்தாதிரிப்பேட்டையில் மழைநீர் வடிகால் பணியின்போது 3 கடைகள் இடிந்து விழுந்தன
x

சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் மழைநீர் வடிகால் பணிக்கு பள்ளம் தோண்டியபோது அருகில் இருந்த 3 கடைகள் இடிந்து விழுந்தன.

சென்னை

மழைநீர் வடிகால் பணி

சென்னை மாநகராட்சியில் உள்ள பல்வேறு பகுதிகளில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே மழைநீர் வடிகால் பணிகளை முடிக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதனால், இரவு நேரங்களில் கூடுதலாக இப்பணிகள் நடைபெற்று வருகிறது. பொதுமக்களின் நலன் கருதி மழைநீர் வடிகால் நடைபெறும் பகுதிகளை சுற்றி பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய மாநகராட்சி உத்தரவிட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சிந்தாதிரிப்பேட்டை பகுதியில் மாநகராட்சி ஊழியர்கள் மழைநீர் வடிகால் பணிக்காக பள்ளம் தோண்டும் பணியில் ஈடுபட்டனர்.

கடைகள் இடிந்து விழுந்தன

நேற்று அதிகாலை 3.30 மணியளவில் அருணாச்சலம் சாலையில் பொக்லைன் எந்திரம் மூலம் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிக்காக சாலையின் ஓரத்தில் பள்ளம் தோண்டினர். அப்போது அருகில் இருந்த 3 கடைகளின் முன்புற பகுதிகள் பலத்த சத்தத்துடன் திடீரென இடிந்து விழுந்தன. இதனால் பள்ளம் தோண்டும் பணி நிறுத்தப்பட்டது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.

போக்குவரத்துக்கு தடை

சிந்தாதிரிப்பேட்டை போலீசாரும் விரைந்து வந்து அப்பகுதியில் போக்குவரத்தை தடை செய்தனர். இதேபோல, இடிபாடுகளை அகற்றும் பணியில் தீயணைப்புத்துறை வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.

அதிகாலையில் நடைபெற்ற இச்சம்பவத்தால் பொதுமக்கள் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. சுமார் 10 மணி நேரத்துக்கும் மேலாக அப்பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டதால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடும் அவதி அடைந்தனர்.


Next Story