ஊத்துக்கோட்டை அருகே குட்டையில் மூழ்கி அண்ணன்- தங்கை பலி
ஊத்துக்கோட்டை அருகே குட்டையில் மூழ்கி அண்ணன்- தங்கை இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஊத்துக்கோட்டை அருகே உள்ள வெள்ளத்துகோட்டை கிராமத்தை சேர்ந்தவர் குப்பையா (வயது 35). இவர் காவலாளியாக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி வனிதா (30). இவர்களது மகன் துரைவேல் (7), மகள் சினேகா (6). நேற்று குப்பையா நோயுற்ற தனது உறவினரை அழைத்துக்கொண்டு திருவள்ளூர் ஆஸ்பத்திரிக்கு சென்றார். வனிதா வீட்டில் இருந்தார். குழந்தைகள் இருவரும் விளையாட வெளியே சென்றனர்.
வீட்டுக்கு வந்த குப்பையா குழந்தைகள் எங்கே? என தனது மனைவி வனிதாவிடம் கேட்டார். அவர்கள் விளையாட வெளியே சென்றிருப்பதாக வனிதா தெரிவித்தார். நீண்ட நேரம் ஆகியும் வீட்டுக்கு குழந்தைகள் வராததால் கலக்கம் அடைந்த குப்பையா அவர்களை தேடி அலைந்தார்.
அவ்வப்போது திருவள்ளூர் மாவட்டத்தில் பெய்து வரும் பலத்த மழையால் நீர்நிலைகள் நிரம்பி வழிகிறது. குழந்தைகள் இருவரும் ஒருவேளை வீட்டின் பக்கத்தில் உள்ள குட்டைக்கு சென்று இருக்கலாம் என சந்தேகித்த குப்பையா அங்கு சென்று பார்த்தார்.
அப்போது குட்டையில் குழந்தைகள் துரைவேல், சினேகா இருவரும் ஆழமான பகுதியில் சிக்கி உயிருக்கு போராடி கொண்டு இருந்தனர்.
உடனே குப்பையா அவர்களை மீட்டு கச்சூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கொண்டு சென்றார். டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்தபோது அண்ணன், தங்கை இருவரும் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து பெண்ணளழலுர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து அண்ணன், தங்கை ஆகியோரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். குட்டையில் மூழ்கி அண்ணன்- தங்கை இருவரும் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.