கரூர் மாவட்டத்தில் காலை உணவு வழங்கும் திட்டம் தொடக்கம்
கரூர் மாவட்டத்தில் காலை உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியம், போத்துராவுத்தன் பட்டி ஊராட்சிக்குட்பட்ட முத்தம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சமூகநலன் மற்றும் மகளிர் நலத்துறை சார்பில் காலை உணவு திட்ட தொடக்க நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் தலைமை தாங்கி திட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். எம்.எல்.ஏ.க்கள். மாணிக்கம், சிவகாமசுந்தரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் மாணவர்களோடு அருகருகே அமர்ந்து உணவருந்தினர்.இத்திட்டத்தின் மூலம் முதற்கட்டமாக கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 67 அரசு தொடக்கப்பள்ளிகள், பழைய ஜெயகொண்டம் பேரூராட்சிக்குட்பட்ட 10 அரசு தொடக்கப்பள்ளிகள் என மொத்தம் 77 அரசு தொடக்கப்பள்ளிகளை சேர்ந்த 3,469 மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு வழங்கப்படுகிறது. இந்தநிகழ்ச்சியில் கிருஷ்ணராயபுரம் ஒன்றியக்குழு தலைவர் சுமித்ராதேவி, ஊராட்சி மன்றத்தலைவர்கள், திட்ட இயக்குனர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.