கொள்ளிடம் கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு
கொள்ளிடம் கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு
திருவாரூர் கடைவீதியில் கழிவறை கட்டும் பணியின் போது கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு அந்தபகுதி முழுவதும் தண்ணீர் வழிந்தோடியது.
கொள்ளிடம் கூட்டு குடிநீர்
தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களை உள்ளடக்கிய ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்திற்கு குடிநீர் ஆதாரமாக கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டம் விளங்கி வருகிறது. இத்திட்டத்தின் படி கொள்ளிடத்தில் இருந்து வேதாரண்யம் வரை குழாய் அமைத்து குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது. இதற்காக பல்வேறு முக்கிய பகுதிகளில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்து ராட்சத மின்மோட்டார் மூலம் நீரேற்றி தினசரி பல லட்சம் குடும்பங்களுக்கு தண்ணீர் சென்றடைகிறது.
அந்த வகையில் திருவாரூர் மாவட்டத்திலும் குழாய் அமைக்கப்பட்டு தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது திருவாரூர் கடைவீதியில் நகராட்சி சார்பில் கழிவறை கட்டும் பணி நடந்து வருகிறது. நேற்று இரவு நடந்த பணியின்போது கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் குடிநீர் குழாய் வழியாக அதிக அளவு தண்ணீர் வெளியேறி சாலையில் ஓடியது. தொடர்ந்து இரவு முழுவதும் குடிநீர் வெளியேறியதில் பல கோடி லிட்டர் தண்ணீர் வீணாக சாலையில் பெருக்கெடுத்து ஓடியது.
சரிசெய்யும் பணி
இதனால் திருவாரூர் கடைவீதி முழுவதும் தண்ணீர் தேங்கியதால் அத்தியாவசிய பொருட்கள் வாங்க வந்த பொதுமக்கள், வியாபாரிகள் என அனைவரும் சிரமத்தை சந்தித்தனர். குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் வண்டிக்கார தெரு, சீனிவாசபுரம், கிடாரங்கொண்டான் உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் நிறுத்தப்பட்டது.
இதுகுறித்து நகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, கழிவறை கட்டுமான பணியின் போது குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் குடிநீர் குழாய்க்கு செல்லும் வால்வு அடைக்கப்பட்டுள்ளது. உடைப்பை சரிசெய்யும் பணிகள் நடந்து வருகிறது. இன்று (நேற்று) மாலைக்குள் சரிசெய்யப்பட்டு மீண்டும் குடிநீர் வினியோகம் செய்யப்படும் என்றனர்.