குன்னூர் அருகே சோகம்:1,000 அடி பள்ளத்தில் தவறி விழுந்து சிறுவன் பலி
குன்னூர் அருகே 1,000 அடி பள்ளத்தில் தவறி விழுந்து சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
குன்னூர்: குன்னூர் அருகே 1,000 அடி பள்ளத்தில் தவறி விழுந்து சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
8-ம் வகுப்பு மாணவன்
நீலகிரி மாவட்டம் குன்னூர் வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் அப்துல் ஹாதி. டிரைவர். இவருக்கு 15 வயதில் ஒரு மகள் மற்றும் அப்துல் ஆசிக் என்ற மகனும் இருந்தனர். இதில் அப்துல் ஆசிக், குன்னூரில் உள்ள அறிஞர் அண்ணா பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான்.
இந்த நிலையில் நேற்றுமுன்தினம் பள்ளி விடுமுறை என்பதால் அப்துல் ஆசிக், அவனது நண்பர்கள் 2 பேர் குன்னூர் அருகே உள்ள எக்கோ ராக் எனப்படும் இயற்கை காட்சி முனை மலைப்பகுதிக்கு சென்று இயற்கை காட்சிகளை கண்டு ரசித்துள்ளனர். மேலும் அங்கு அவர்கள் சுற்றித்திரிந்தும், விளையாடியும் உள்ளனர்.
1,000 அடி பள்ளம்
அப்போது அப்துல் ஆசிக் எதிர்பாராத விதமாக தவறி மலையில் இருந்து 1,000 அடி பள்ளத்தில் விழுந்ததாக தெரிகிறது.
இதனால் பதறிப்போன அவனது நண்பர்கள் செய்வதறியாது திகைத்தனர். தொடர்ந்து அப்துல் ஆசிக் எப்படியாவது வீட்டுக்கு வந்து விடுவான் என்று நண்பர்கள் நினைத்து பயத்துடன் வீட்டுக்கு சென்று இதுபற்றி யாரிடமும் சொல்லாமல் இருந்துள்ளனர். இதற்கிடையே நேற்று முன்தினம் இரவு வரை மகன் அப்துல் ஆசிக் வீட்டுக்கு வரவில்லை என்பதால் பெற்றோர்கள் பதறி போய் உள்ளனர். மேலும் மகனை, அக்கம்பக்கம் சென்று தேடி விசாரித்து பார்த்தனர்.
பிணமாக மீட்பு
ஆனாலும் அப்துல் ஆசிக் குறித்து எந்த தகவலும் தெரியாததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், மகனை காணவில்லை என்று நேற்று மேல் குன்னூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் அப்துல் ஆசிக் கடைசியாக தனது நண்பர்களுடன் இருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவனது நண்பர்களிடம் விசாரணை நடத்தியதில், அவர்கள் நடந்த சம்பவத்தை கூறினார்கள். இதைக்கேட்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.
இதைத்தொடர்ந்து தகவலின் பேரில் குன்னூர் தீயணைப்புத்துறையினர் மற்றும் கொலக்கம்பை இன்ஸ்பெக்டர் கோமதி தலைமையிலான போலீசார் நண்பர்கள் கூறியபடி எக்கோ ராக் மலைப்பகுதிக்கு சென்று சிறுவன் அப்துல் ஆசிக் தவறி விழுந்த இடத்தில் இருந்து மலையின் பள்ளமான பகுதிக்கு சென்று ஆய்வு செய்து தேடுதல் வேட்டை நடத்தியபோது அங்கு அப்துல் ஆசிக் இறந்து பிணமாக கிடந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவனது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குன்னூர் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். 1,000 அடி பள்ளத்தில் தவறி விழுந்து சிறுவன் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
'செல்பி' எடுத்தபோது தவறி விழுந்தானா?
பலியான சிறுவன் அப்துல் ஆசிக், தனது நண்பர்களுடன் எக்கோ ராக் இயற்கை காட்சி முனை பகுதிக்கு சென்று அங்கு தனியாகவும், நண்பர்களுடனும் சேர்ந்து செல்போனில் செல்பி உள்பட புகைப்படங்கள்
எடுத்ததாக கூறப்படுகிறது. இதில் ஒரு கட்டத்தில் மலையின் தாழ்வான பகுதிக்கு சென்று செல்பி எடுக்க முயன்ற போது எதிர்பாராதவிதமாக அப்துல் ஆசிக் தவறி விழுந்து விட்டதாக கூறப்படுகிறது. மேலும் அவனது நண்பர்கள், போலீசாரின் விசாரணையில் பயந்து மாற்றி மாற்றி பேசுவதால் உண்மை என்ன என்பது தெரியவில்லை.