சிவகங்கையில் மாநில குத்துச்சண்டை போட்டி-அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தொடங்கி வைத்தார்
பள்ளி கல்வித்துறை சார்பில் சிவகங்கையில் மாநில அளவில் நடைபெறும் குத்துச்சண்டை போட்டியை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தொடங்கி வைத்தார்.
பள்ளி கல்வித்துறை சார்பில் சிவகங்கையில் மாநில அளவில் நடைபெறும் குத்துச்சண்டை போட்டியை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தொடங்கி வைத்தார்.
குத்துச்சண்டை போட்டி
தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டிகள் சிவகங்கை சாம்பவிகா மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடைபெற்றது. 4 நாட்கள் நடைபெறும் இந்த போட்டியின் தொடக்க விழா மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் வளர்மதி வரவேற்று பேசினார்.
கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 17 வயதிற்குட்பட்டவர்களுக்கான போட்டிகளை தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் கூறியதாவது:- குடியரசு தினம் மற்றும் பாரதியார் பிறந்த தினத்தையொட்டி மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள் தற்போது நடைபெற்று வருகிறது. அதன்படி சிவகங்கை மாவட்டத்தில் குத்துச்சண்டை போட்டிகள் நடக்கிறது.
மாநில அளவிலான....
மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியாக நடத்தப்படும் இந்த போட்டிகளில் 14, 17 மற்றும் 19 வயதிற்குட்பட்ட பிரிவுகளில் போட்டிகள் நடக்கிறது. இந்த போட்டிகளில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இருந்து 920 மாணவிகளும், 1100 மாணவர்களும் கலந்து கொள்கிறார்கள். இந்த போட்டிகள் 4 நாட்கள் நடைபெற உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் மெட்ரிக் பள்ளிகளின் மாவட்ட கல்வி அலுவலர் விஜயசரவணன், மாவட்ட தி.மு.க. துணை செயலாளர்கள் சேங்கை மாறன், மணிமுத்து, சிவகங்கை நகர சபை தலைவர் துரை ஆனந்த், சாம்பவிகா பள்ளி செயலாளர் சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.