சைதாப்பேட்டை அருகே நடைபாதையில் ஆழ்துளை கிணறு அமைத்தவர் மீது மாநகராட்சி நடவடிக்கை
சைதாப்பேட்டை அரங்கநாதன் சுரங்கப்பாதை அருகில், வீட்டின் உரிமையாளர் ஒருவர் காவிரி நகர் சாலை நடைபாதையில் ஆழ்துளைக் கிணறு அமைத்த இடத்தினை மாநகராட்சி ஆணையாளர் பார்வையிட்டு வீட்டின் உரிமையாளர் மீது காவல்துறையின் வாயிலாக நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தினார்.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று காலை சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் மக்களை சந்திக்க செல்லும்போது, அடையாறு மண்டலம் 169-வது வார்டுக்கு உட்பட்ட காவிரி நகர் அரங்கநாதன் சுரங்கப்பாதை கிழக்கு பகுதியில் 70 அடி சாலையின் தெற்கில் உள்ள வீட்டின் உரிமையாளர் ஒருவர் தனது வீட்டுக்காக 70 அடி சாலையின் நடைபாதையில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி மேற்கொண்டிருந்ததையும், ஆழ்துளை கிணறு அமைக்கும்போது வெளியேறும் ஈரக்களிமண் கழிவானது சாலை முழுவதும் பரவி கிடந்ததையும் கண்டறிந்து, உடனடியாக இந்த பணியை தடுத்து நிறுத்தி, இதனை மேற்கொண்ட வீட்டின் உரிமையாளர் மற்றும் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியை மேற்கொண்டவர் மீது நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் அந்த இடத்தை பார்வையிட்டு வீட்டின் உரிமையாளர் சுரேஷ் மீதும், ஆழ்துளை கிணறு அமைத்த வாகனத்தை கைப்பற்றி அதன் உரிமையாளர் மீதும் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ள செயற்பொறியாளர் புருசோத்தமன் வாயிலாக போலீசில் புகார் அளித்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
மேற்கண்ட தகவல் பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.