புதுக்கோட்டையில் புத்தக திருவிழா


புதுக்கோட்டையில் புத்தக திருவிழா
x

புதுக்கோட்டையில் புத்தக திருவிழாவை அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார்.

புதுக்கோட்டை

புத்தக திருவிழா

புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் 6-வது புத்தக திருவிழா புதுக்கோட்டை நகர்மன்றத்தில் நேற்று தொடங்கியது. தொடக்க விழாவுக்கு கலெக்டர் மெர்சி ரம்யா தலைமை தாங்கி பேசினார். விழாவில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புத்தக திருவிழாவை தொடங்கி வைத்து, புத்தக கண்காட்சி அரங்குகளை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். விழாவில் அவர் பேசும்போது கூறியதாவது:-

ஒவ்வொரு மனிதனும் தன்னைப் பற்றியும், தனது நாகரிகத்தை பற்றியும் தெரிந்துகொள்வதற்கு வரலாறு மிக முக்கியமாகும். 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்று பெருமை கொண்ட நம்முடைய வரலாற்றினை அறிந்து கொள்வதற்கு புத்தகங்கள் மிக முக்கியமானதாகும். மேலும் நம்மை நாமே அறிந்து கொள்வதற்கு வாசிப்பு பழக்கத்தை நம்மிடையே வளர்த்துக்கொள்ள வேண்டும்.

கலைஞர் நூற்றாண்டு நூலகம்

விலைமதிப்புமிக்க செல்வமான கல்வி செல்வத்தை நம்மிடமிருந்து யாராலும் பறிக்க இயலாது. அப்படிப்பட்ட கல்வி செல்வத்தினை அனைவருக்கும் அளிக்க வேண்டும் என்ற அடிப்படையில், தமிழக அரசின் சார்பில், இல்லம் தேடிக் கல்வி உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. வாசிப்பு பழக்கத்தை மாணவ-மாணவிகளிடம் ஏற்படுத்தும் வகையில் அனைத்து பள்ளிகளிலும் நூலகத்திற்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படுகிறது, மதுரையில் வரலாற்று சிறப்புமிக்க 'கலைஞர் நூற்றாண்டு நூலகம்' முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த நூலகத்தில் அனைத்து தரப்பு மக்களும் பயன்படுத்தும் வகையில், அனைத்து அடிப்படை வசதிகளுடன் உலகத்திலேயே சிறந்த நூலகமாக திகழ்ந்து வருகிறது. இதுபோன்ற திட்டங்களால் கல்வி வளர்ச்சியில் தமிழகம் சிறப்பிடம் பெற்று வருகிறது. எனவே தமிழனின் அடையாளமாக விளங்கும் வாசிப்பு பழக்கத்தை நம்மிடையே வளர்க்கும் வகையில் புதுக்கோட்டை நகர்மன்றத்தில் நடைபெறும் புத்தக திருவிழாவில் பங்கேற்று, தங்களுக்கு தேவையான புத்தகங்களை வாங்கி படித்து பயன்பெறலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

3 லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள்

புத்தக திருவிழாவில் 112 அரங்குகளில் பல்வேறு தலைப்புகளில் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன. இதுதவிர புத்தகங்களை பிறருக்கு பரிசாக தபால் மூலம் அனுப்ப வசதியாக தபால்துறையால் அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல் கைதிகளுக்கு புத்தகம் பிறர் பரிசாக வழங்குவதை பெறுவதற்கு சிறைத்துறையின் சார்பில் ஒரு அரங்கமும் உள்ளது.

முன்னதாக தொடக்க விழாவில் எம்.எல்.ஏ.க்கள் முத்துராஜா, சின்னதுரை, திருச்சி சரக சிறைத்துறை டி.ஐ.ஜி. ஜெயபாரதி, மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, முன்னாள் அரசு வக்கீல் செல்லபாண்டியன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஜெயலட்சுமி, நகர்மன்ற தலைவர் திலகவதி செந்தில், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் மஞ்சுளா, ஆர்.டி.ஓ. முருகேசன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கருணாகரன், நகர்மன்ற துணைத்தலைவர் லியாகத்அலி, விழா ஒருங்கிணைப்பாளர்கள் தங்கம் மூர்த்தி, வீரமுத்து, முத்துக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக மாணவ-மாணவிகளின் சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றது. புத்தக திருவிழா வருகிற 6-ந் தேதி வரை நடைபெற உள்ளது. தினமும் கலைநிகழ்ச்சி, கவியரங்கம் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.


Next Story