மாமல்லபுரத்தில் கரை ஒதுங்கிய மீனவரின் உடல்


மாமல்லபுரத்தில் கரை ஒதுங்கிய மீனவரின் உடல்
x

நாகப்பட்டினத்தில் கடலில் மூழ்கிய மீனவரின் உடல் மாமல்லபுரத்தில் கரை ஒதுங்கியது.

செங்கல்பட்டு

நாகை மாவட்டம் கீச்சாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் ரகு (வயது 38). இவர் தனது நண்பர்கள் 3 பேருடன் நாகப்பட்டினம் கடலில் கடந்த 11-ந்தேதி படகில் மீன்பிடிக்க சென்றார். கடலில் படகு கவிழ்ந்ததில் உடன் சென்ற மீனவர்கள் 2 பேர் நீந்தி உயிர் தப்பினர். மீனவர் ரகு மட்டும் கடலில் தவறி விழுந்து மூச்சு திணறி உயிரிழந்தார். அவரது உடலை கடந்த 12 நாட்களாக அங்குள்ள மீனவர்கள் மற்றும் போலீசார் தனிப்படகில் சென்று தேடி வந்தனர். ஆனால் அவரது உடலை கண்டுபிடிக்க முடியவில்லை. நாகப்பட்டினம் கடற்கரையிலும் கரை ஒதுங்கவில்லை. இதையடுத்து நாகப்பட்டினம் போலீசார் கடலோர மாவட்டங்களில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும், கடலோர பாதுகாப்பு படையினருக்கும் கடலில் தவறி விழுந்து இறந்த மீனவரின் அடையாளத்துடன் அவரது உடலை கணடுபிடித்து தருமாறு தகவல் தெரிவித்து இருந்தனர்.

இநத நிலையில் நேற்று மாமல்லபுரம் கடற்கரையில் அழுகிய நிலையில் ஒருவரது உடல் கரை ஒதுங்கி இருப்பதாக உள்ளூர் மீனவர்கள் சிலர் மாமல்லபுரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலில் உள்ள அடையாளங்களை கொண்டு பார்த்தபோது நாகப்பட்டினம் கடலில் தவறி விழுந்து இறந்த ரகு என்பதை உறுதி செய்து அவரது குடும்பத்தினருக்கும், அங்குள்ள போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மாமல்லபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story