தமிழக அரசை கண்டித்து பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்
தமிழக அரசை கண்டித்து பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டம்
திருச்சி சூளக்கரை மாரியம்மன் கோவில் அருகே பா.ஜ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வார்டு தலைவர் குமார் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட தலைவர் ராஜசேகரன் கலந்து கொண்டு கண்டனம் தெரிவித்து பேசினார். காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசை கண்டிக்க தவறிய தமிழக தி.மு.க. அரசை கண்டித்தும், தமிழகத்தில் அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்குவதாக வாக்குறுதி தந்த தி.மு.க. அரசு, தற்போது பெரும்பான்மையான பெண்களுக்கு உரிமை தொகை வழங்க மறுப்பதை கண்டித்தும், டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தியும், மூன்று முறை மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, வாகன பதிவு கட்டணங்கள் உயர்வு, பத்திரப்பதிவு கட்டணங்கள் உயர்வு என மக்கள் மீது அனைத்து விதமான கட்டண உயர்வை சுமத்திய தி.மு.க. அரசை கண்டித்தும், சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் பாலக்கரை மண்டல் தலைவர் செல்வராஜ், விளையாட்டு பிரிவு மாவட்ட தலைவர் கோகுல முருகன், விவசாய அணி தலைவர் சக்திவேல் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். இதேபோல் திருச்சி புறநகர் மற்றும் மாநகரில் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மணப்பாறை, முசிறி, உப்பிலியபுரம், தொட்டியம்
இதில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மணப்பாறையில் நகர தலைவர் கோபாலகிருஷ்ணன் தலைமையிலும், மேலும் 20 இடங்களிலும் பா.ஜ.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதேபோல் மணப்பாறை வடக்கு ஒன்றியத்திலும் பல்வேறு இடங்களில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். முசிறியில் பா.ஜ.க. நகர் மண்டல் தலைவர் வக்கீல் தமிழ்ச்செல்வன் தலைமையிலும், முத்தம்பட்டியில் பா.ஜ.க. பட்டியல் அணி மாவட்ட நிர்வாகி சரவணன் தலைமையிலும் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியினர் கலந்து கொண்டு, பல்வேறு கோஷங்களை எழுப்பினர். உப்பிலியபுரம் அண்ணா சிலை அருகே வடக்கு மண்டல பா.ஜ.க. சார்பில் மண்டல தலைவர் லோகநாதன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொட்டியம் வாணப்பட்டறை முக்கத்தில் ஒன்றிய தலைவர் நந்தகுமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் ஊர்வலமாக சென்று ஒவ்வொரு கடையிலும் துண்டு பிரசுரங்களை வழங்கினர்.