ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினருக்கு பாஜக தலைவர் அண்ணாமலை நேரில் ஆறுதல்


ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினருக்கு பாஜக தலைவர் அண்ணாமலை நேரில் ஆறுதல்
x

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை,

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங் (52). இவர் கடந்த 5ம் தேதி இரவு பெரம்பூர் வேணுகோபால் சாமி கோவில் தெருவில் உள்ள அவரது வீட்டின் முன்பு மர்ம கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார். உணவு வினியோகம் செய்யும் ஊழியர்கள் போல் உடை அணிந்து வந்த கும்பல் சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பியது. கொலையாளிகள் தப்பிச்செல்லும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

அதை அடிப்படையாக வைத்து செம்பியம் போலீசார் 10 தனிப்படைகளை அமைத்து துப்பு துலக்கினர். இந்த கொலை வழக்கில் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிக்குப்பழியாக ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது. மேலும், கொலைக்கு அரசியல் காரணங்கள் எதுவும் இல்லை என போலீசார் தெரிவித்தனர்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் உண்மையான குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. அவர்களை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். உண்மைநிலை வெளியே வர வேண்டும் என்றால் சிபிஐ விசாரணைக்கு ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை மாற்ற வேண்டும் என அவருடைய ஆதரவாளர்கள், பல்வேறு கட்சி நிர்வாகிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் இல்லத்திற்கு தமிழக பாஜகதலைவர் அண்ணாமலை நேரில் சென்று அவரது உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் ஆம்ஸ்ட்ராங்கின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.


Next Story