ரூ.1.5 கோடி கொள்ளை போனதாக பா.ஜ.க நிர்வாகி பொய் புகார் - ரூ.18.5 லட்சம் மீட்பு


ரூ.1.5 கோடி கொள்ளை போனதாக பா.ஜ.க நிர்வாகி பொய் புகார் - ரூ.18.5 லட்சம் மீட்பு
x

பொதுமக்கள் நகை, பணம் தொலைந்தால், திருடு போனால் அதை மிகைப்படுத்தி சொல்ல வேண்டாம் என்று கோவை எஸ்.பி. பத்ரி நாராயணன் தெரிவித்தார்.

கோவை,

கோவை மாவட்டம் அன்னூர் அருகே சொக்கம்பாளையம் திருமுருகன் நகரில் வசிப்பவர் விஜயகுமார் (வயது 45). இவர் பா.ஜ.க.வின் அமைப்பு சாரா அணியின் முன்னாள் ஒன்றிய தலைவர் ஆவார். இவர் வாகனங்களுக்கு வாட்டர் வாஸ் மற்றும் வீல் அலாய்மென்ட் செய்யும் கடை வைத்துள்ளார். இவரது வீட்டில் கடந்த 18-ந் தேதி மர்ம நபர்கள் கதவை உடைத்து பீரோவில் வைத்திருந்த ரூ.1.50 கோடி பணம், 9 பவுன் தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை கொள்ளை அடித்து சென்றதாக விஜயகுமார் அன்னூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

இவ்வழக்கில் கொள்ளையர்களை பிடிக்க 10 சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டது. இவர்கள் விஜயகுமாரின் வீட்டை சுற்றி சுமார் 2 கிலோமீட்டர் தொலையில் இருந்த சி.சி.டி.வி காட்சிகளை வைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர். பின்னர் திருவாரூர் மாவட்டம் முத்துபேட்டை நாச்சிகுளத்தைச் சேர்ந்த அன்பரசன் (வயது 33) என்பவரை பிடித்து விசாரித்தனர். இவர் விஜயகுமார் வீட்டில் நகை, பணத்தை கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்டார். ஆனால் கொள்ளை போன பணம் ரூ.1.50 கோடி என்பதற்கு பதிலாக ரூ.18.50 லட்சம் மற்றும் 9 பவுன் தங்க நகை, 200 கிராம் வெள்ளி பொருட்கள் என தெரிந்தது.

இதையடுத்து அவரிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணம் மற்றும் தங்கம், வெள்ளி நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து குற்றவாளியை நீதிபதி முன் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். ரூ.1.50 கோடி கொள்ளை போனதாக பொய்யான தகவல் கொடுத்த புகார்தாரர் விஜயகுமார் மீது நீதிமன்ற வழிகாட்டுதல்படி சட்டப்படி நடவடிக்கை எடுக்க உள்ளதாக கோவை மாவட்ட எஸ்.பி பத்ரிநாராயணன் தெரிவித்தார். இதுகுறித்து கோவை மாவட்ட எஸ்.பி பத்ரிநாராயணன் கூறியதாவது:-

கொள்ளை வழக்கில் கைதான அன்பரசனிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர் விஜயகுமார் வீட்டில் இருந்து ரூ.18.5 லட்சம் பணம்தான் எடுத்ததாக கூறினார் இதுகுறித்து புகார்தாரரிடம் கேட்டபோது ரூ.18.5 லட்சம் தான் இருந்தது என ஒப்புக்கொண்டார். போலீசாரிடம் பிரமாண்டமான தொகை திருடு போனது என சொன்னால்தான் போலீசார் துரிதமாக வேலை செய்வார்கள் என சொன்னதாக கூறினார்.

பொய்யான தகவல் கூறியதால் அவர் மீது ஐ.பி.சி.,182, 203 பிரிவுகளின் கீழ் சட்டப்படி நடவடிக்கை எடுக்க உள்ளோம். பொதுமக்களுக்கு ஒரு வேண்டுகோள் நகை, பணம் தொலைந்தால், திருடு போனால் அதை மிகைப்படுத்தி சொல்ல வேண்டாம். இதனால் விசாரணை திசை மாறும். கைது செய்யப்பட்டுள்ள அன்பரசன் மீது பல்வேறு மாவட்டங்களில் 20-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story