பெங்களூருவில் திருடப்பட்ட பைக் திருப்பத்தூரில் மீட்பு - ஜி.பி.எஸ். கருவி மூலம் கொள்ளையர்களை கண்டுபிடித்த ஐ.டி. ஊழியர்
திருடப்பட்ட பைக் ஆம்பூர் அருகே நீண்ட நேரமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக ஜி.பி.எஸ். கருவியில் காட்டியுள்ளது.
திருப்பத்தூர்,
தஞ்சாவூரைச் சேர்ந்த ஜெயபெருமாள், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் ஐ.டி. ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர் தனது நண்பர்களுடன் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டியில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்கி வந்துள்ளார்.
ஜெயபெருமாள் தனது பைக்கை வீட்டின் அருகே நிறுத்தி வைப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த பைக்கில் ஜி.பி.எஸ். கருவியையும் அவர் பொருத்தியுள்ளார். இந்நிலையில் நேற்று அதிகாலை அவரது பைக்கில் இருந்த ஜி.பி.எஸ். கருவியில் இருந்து ஜெயபெருமாளின் மொபைல் போனுக்கு அலாரம் மற்றும் குறுஞ்செய்தி வந்துள்ளது.
இதனால் சுதாரித்துக் கொண்ட ஜெயபெருமாள் உடனடியாக எழுந்து வீட்டிற்கு வெளியே சென்று பார்த்த போது அவரது பைக் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர் உடனடியாக தனது நண்பர்களுடன் சேர்ந்து ஜி.பி.எஸ். கருவியில் காட்டும் பாதையை பின் தொடர்ந்து வந்துள்ளார்.
அப்போது தனது பைக் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே நீண்ட நேரமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக ஜி.பி.எஸ். கருவியில் காட்டியுள்ளது. இதையடுத்து அந்த பகுதிக்குச் சென்று பார்த்த போது, ஜெயபெருமாளின் பைக் அங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததையும், அதனுடன் 5 பேர் நின்று கொண்டிருந்ததையும் அவர்கள் கண்டனர்.
உடனடியாக ஜெயபெருமாளும், அவரது நண்பர்களும் சேர்ந்து அந்த 5 பேரையும் மடக்கிப் பிடித்து ஆம்பூர் காவல்நிலைய போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அந்த 5 பேரையும் கைது செய்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.