1,038 கலைஞர்கள் பங்கேற்ற பரதநாட்டிய நிகழ்ச்சி
தஞ்சை பெரிய கோவிலில் ஒரே நேரத்தில் 1,038 பரத நாட்டிய கலைஞர்கள் பங்கேற்ற நாட்டிய நிகழ்ச்சி 13 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று நடந்தது.
ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழா
தஞ்சை பெரிய கோவிலை மாமன்னன் ராஜராஜ சோழன் 1003-ம் ஆண்டு கட்டத்தொடங்கி 1010-ம் ஆண்டு கட்டி முடித்தார். இதன் ஆயிரம் ஆண்டு நிறைவு விழா கடந்த 2010-ம் ஆண்டு கொண்டாடப்பட்டது.
அப்போது தஞ்சை பெரிய கோவிலில் ஒரே நேரத்தில் 1000 பரத நாட்டிய கலைஞர்கள் பங்கேற்ற நாட்டிய நிகழ்ச்சி நடந்தது. இந்த பரதநாட்டிய நிகழ்ச்சி அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதி முன்னிலையில் நடந்தது.
13 ஆண்டுகளுக்கு பிறகு...
அதன்பிறகு 13 ஆண்டுகளுக்குப்பிறகு நேற்று 1,038 பரதநாட்டிய கலைஞர்கள் பங்கேற்ற நாட்டிய நிகழ்ச்சி நடந்தது. மாமன்னன் ராஜராஜ சோழனின்1,038-வது சதய விழா நேற்று தொடங்கியதையொட்டி இந்த விழாவின் ஒரு பகுதியாக பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்தது.
இதில் தஞ்சை, திருச்சி, கோவை, சென்னை, மதுரை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பரதநாட்டிய கலைஞர்கள் கலந்து கொண்டனர்.
1,038 பரத நாட்டிய கலைஞர்கள்
இந்த நாட்டிய நிகழ்ச்சி நேற்று மாலை 6.15 மணிக்கு தொடங்கி 6.45 மணிக்கு முடிவடைந்தது. அரை மணி நேரம் நடந்த இந்த நாட்டிய நிகழ்ச்சியில் 25 குழுக்களை சேர்ந்த கலைஞர்கள் மற்றும் தனிநபராக 50 கலைஞர்களும் என 1,038 நாட்டிய கலைஞர்கள் கலந்து கொண்டனர். இதனை தவிர்த்து 100 இசை கலைஞர்களும் கலந்து கொண்டனர்.
பெரிய கோவிலில் உள்ள நந்திெயம்பெருமான் மண்டபத்தை சுற்றிலும் இந்த நாட்டிய நிகழ்ச்சி நடந்தது. இதற்காக கலைஞர்கள் நிற்பதற்கு வசதியாக எண்கள் குறிப்பிடப்பட்டு இருந்தது. இதில் பங்கேற்ற கலைஞர்களுக்கு1 முதல் 1,038 வரை டோக்கன் வழங்கப்பட்டு அதன்படி அவர்களுக்கு வழங்கப்பட்ட டோக்கனில் உள்ள எண் வழங்கப்பட்ட நபர் குறிப்பிட்ட இடத்திற்கு சென்று நின்று கொண்டு நடனம் ஆடினார். இவர்கள் அனைவரும் மேடைக்கு 5 மணிக்கு வந்து தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் நின்றனர்.
பலத்த போலீஸ் பாதுகாப்பு
முன்னதாக கலைஞர்கள் அனைவரும் பெரியகோவில் அருகே உள்ள பெத்தண்ணன் கலையரங்க வளாகத்திற்கு வரவழைக்கப்பட்டு அங்கிருந்து வரிசையாக கோவில் வளாகத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். 3 பாடல்களுக்கு அவர்கள் நடனம் ஆடினர்.
இந்த நாட்டிய நிகழ்ச்சியை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டுகளித்தனர். நாட்டிய நிகழ்ச்சியையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.