பெங்களூரு காரைக்கால் பயணிகள் ரெயில் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது

சின்னசேலம் வழியாக பெங்களூரு காரைக்கால் பயணிகள் ரெயில் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது பொதுமக்கள் மகிழ்ச்சி
சின்னசேலம்
பெங்களூருவில் இருந்து சின்னசேலம் வழியாக காரைக்காலுக்கு பெங்களூரு சிட்டி- காரைக்கால் விரைவு பயணிகள் ரெயில் இயக்கப்பட்டு வந்தது. ஆனால் கொரோனா தொற்று பரவல் காரணமாக இந்த ரெயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில் ரெயில் பயணிகள், வியாபாரிகள், மாணவர்கள் ஆகியோரின் கோரிக்கையை ஏற்று பெங்களூரு சிட்டி-காரைக்கால் பயணிகள் விரைவு ரெயிலை அதிவிரைவு ரெயிலாக இயக்குவதாக தெற்கு ரெயில்வே அறிவித்து இருந்தது. அதன்படி நேற்று முதல் இந்த ரெயில் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது. நேற்று காலை 7:30 மணிக்கு பெங்களூருவில் இருந்து புறப்பட்ட பெங்களூரு சிட்டி-காரைக்கால் அதிவிரைவு பயணிகள் ரெயில் சுமார் 20 நிமிடம் தாமதமாக மதியம் 3.15 மணிக்கு சின்னசேலம் ரெயில் நிலையத்துக்கு வந்து சென்றது.
மறுமார்க்கத்தில் காரைக்காலில் இருந்து அதிகாலை 5.30 மணிக்கு புறப்பட்ட காரைக்கால்-பெங்களூரு சிட்டி அதிவிரைவு பயணிகள் ரெயில் மதியம் 12.25 மணிக்கு சின்னசேலம் ரெயில் நிலையத்துக்கு வந்து சென்றது. சுமார் 2 ஆண்டுகளுக்கு பிறகு பெங்களூர் சிட்டி-காரைக்கால் பயணிகள் ரெயில் மீண்டும் இயக்கப்படுவதால் பொதுமக்கள் மகிழச்சி அடைந்துள்ளனர்.






