சென்னையில் 2-ம் கட்டமாக அமைக்கப்படும் மெட்ரோ ரெயில் நிலையங்களில் இருந்து பேட்டரி வாகன சேவை


சென்னையில் 2-ம் கட்டமாக அமைக்கப்படும் மெட்ரோ ரெயில் நிலையங்களில் இருந்து பேட்டரி வாகன சேவை
x

சென்னையில் 2-ம் கட்டமாக நடந்து வரும் மெட்ரோ ரெயில் சேவை தொடங்கிய உடன் பயணிகள் நலன் கருதி அனைத்து ரெயில் நிலையங்களிலும் பேட்டரி பஸ் மற்றும் ஆட்டோ ரிக்‌ஷாக்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை

பயணிகளுக்கு வசதி

சென்னை மாநகரில் சுமார் 55 கிலோ மீட்டர் தூரத்துக்கு 2 வழித்தடங்களில் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. தினசரி சராசரியாக ஒரு நாளைக்கு 1 லட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகள் இதில் பயணிக்கின்றனர். பயணிகள் வசதிக்காக, சென்னை மெட்ரோ ரெயில் நிலையங்களின் அருகில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அமைந்துள்ள பகுதிகள், குடியிருப்புகள் அதிகம் உள்ள பகுதிகள் மற்றும் முக்கியமான இடங்களுக்கு மாநகர போக்குவரத்து கழகம் 22 மினி பஸ்களை இயக்கி வருகிறது.

இதுதவிர 40 பேட்டரி ஆட்டோ ரிக்ஷாக்கள் மற்றும் வாடகைக்கு சைக்கிள்கள் போன்ற வசதிகள் 41 ரெயில் நிலையங்களில் பயணிகளுக்கு செய்து தரப்பட்டு உள்ளது. இந்த சேவையை விரிவுப்படுத்தும் திட்டமும் மெட்ரோ ரெயில் நிறுவனத்திடம் உள்ளது. இந்த நிலையில் சென்னையில் 2-ம் கட்டமாக நடந்து வரும் மெட்ரோ ரெயில் சேவைக்கான பணிகளிலும் இந்த திட்டத்தை விரிவுப்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

இதுகுறித்து சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:-

பேட்டரி வாகனங்கள் இயக்க திட்டம்

சென்னையில் 2-ம் கட்டமாக 116.1 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரெயில் சேவைக்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. வருகிற 2026-ம் ஆண்டில் இருந்து படிப்படியாக 2028-ம் ஆண்டுகளில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு இந்த சேவை வர உள்ளது. அதற்கு பிறகு அனைத்து ரெயில் நிலையங்களில் இருந்து அருகில் உள்ள பகுதிகளுக்கு பேட்டரியில் இயங்கும் மினி பஸ் மற்றும் ஆட்டோ ரிக்ஷாக்களை இயக்குவது குறித்து பரிசீலித்து வருகிறோம். இதற்கு தேவையான வாகனங்களின் எண்ணிக்கை, இயக்கப்பட உள்ள வழித்தடங்கள், மின்சாரம் சார்ஜ் செய்யும் இடங்கள், வாகனங்களுக்கான கட்டணம் குறித்து ஆய்வு செய்து வருகிறோம்.

இது குறித்து முறையாக அரசிடம் அனுமதி கோரப்பட உள்ளது. மெட்ரோ ரெயில் நிறுவனத்துக்கு சொந்தமான வாகனங்களை இயக்குவதா? அல்லது தனியார் நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்து கொண்டு வாகனங்களை இயக்குவதா? என்பதெல்லாம் குறித்து பின்னர் பரிசீலிக்கப்பட உள்ளது. கிளாம்பாக்கம் பஸ் முனையம் திறக்கப்பட்டால், உடனடியாக எங்களால் மெட்ரோ ரெயில் இயக்க முடியாது. மாறாக விமான நிலையம் மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து பஸ்களை இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

1 More update

Next Story