அடிப்படை வசதிகளை மேற்கொள்ள வேண்டும்: மாவட்ட கண்காணிப்பாளர் அறிவுறுத்தல்
பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட கண்காணிப்பாளர் அறிவுறுத்தினார்.
ஆய்வு
கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று அனைத்துத்துறைகளில் செயல்படுத்தப்படும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தலைமை தாங்கினார்.
இந்த ஆய்வு கூட்டத்தில் மாவட்ட கண்காணிப்பாளரும், மீன்வளத்துறை ஆணையருமான கே.எஸ்.பழனிச்சாமி கலந்து கொண்டு, கலைஞரின் மகளிர் உரிமைத்தொகை திட்டப்பணிகள் செயல்பாடுகள் குறித்தும், விண்ணப்பங்களை எவ்வாறு பதிவேற்றம் செய்வது குறித்தும், 2 கட்டமாக நடைபெறும் முகாம்களின் செயல்பாடுகள், முகாம்கள் நடைபெறும் இடங்களில் பொதுவான அடிப்படை வசதிகளான குடிநீர், கழிவறை மற்றும் இருக்கை வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.
அடிப்படை வசதிகள்
பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர், தெருவிளக்கு வசதி, குப்பைகளை அகற்றும் பணிகளை மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகள் மேற்கொள்ள வேண்டும். ஊரக வளர்ச்சித்துறை சார்பில் மேற்கொள்ளப்படும் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டங்களின் பொதுமக்களுக்கு வேலையினை உறுதி செய்திட வேண்டும். மாவட்ட தொழில் மையம் சார்பில் இளம் தொழில் முனைவோர்களுக்கு முன்னுரிமை அளித்து அவர்களுக்கு தேவையான வழிமுறைகளை ஏற்படுத்தி தரவேண்டும்.
மேலும் அனைத்துத்துறை அலுவலர்களும் களத்திற்கு நேரடியாக சென்று மக்களின் தேவைகளை கேட்டறிந்து பூர்த்தி செய்திட வேண்டும் என அனைத்துத்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
பயிற்சி வகுப்பு
தொடர்ந்து கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கூட்டரங்கில் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம் முகாம் பொறுப்பு அலுவலர்கள், விண்ணப்பபதிவு தன்னார் வலர்கள் மற்றும் உதவி மையத் தன்னார்வலர்களுக்கு வழங்கப்படும் பயிற்சி வகுப்பினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் தெரிவித்திருப்பதாவது:- வரக்கூடிய பெண்கள், பயனாளிகள் அல்லது மனுதாரர்கள் அவர்கள் கொண்டு வரக்கூடிய ஒரு விண்ணப்பத்தாளில் அல்லது மனுவில் இருக்கக்கூடிய விவரங்களை ஏற்றுவது தான் உங்களுடைய பிரதான வேலையாகும்.
ஒரு முன்னோடி திட்டம்
இந்த செயலியில் ஆதார் இணைப்பு முறைகள், ஆதார் எண்ணும் அந்த சம்பந்தப்பட்ட நபர்களுடைய விவரங்கள் அனைத்தும் ஒன்றிணைக்க வேண்டும். அதில் ஒன்று நம்முடைய கைவிரல் ரேகை பதிவு செய்வது, 2-வதாக ஒருமுறை விண்ணப்பிக்க குறியீட்டு எண், 3-வதாக மற்ற நேரங்களில் அதனை எப்படி நாம் பதிவேற்றம் செய்வது என்பது குறித்து தெரிந்து கொள்ள வேண்டும்.
தமிழக அரசின் மிக முக்கியமான ஒரு முன்னோடி திட்டம். குறிப்பாக பெண்களுக்கான உதவித்தொகை வழங்கப்பட உள்ளது உன்னதனமான திட்டம். இந்த திட்டத்தை செயல்படுத்துவதில் பிரதான பங்கு உங்களுடையது என்பதை கண்டிப்பாக மகிழ்ந்து கொள்ள வேண்டும், இவ்வாறு அவர் கூறினார்.