அடுக்குமாடி குடியிருப்புகளில் அடிப்படை வசதிகள்


அடுக்குமாடி குடியிருப்புகளில் அடிப்படை வசதிகள்
x
தினத்தந்தி 30 Aug 2023 4:00 AM IST (Updated: 30 Aug 2023 4:00 AM IST)
t-max-icont-min-icon

ஓய்வு பெற்ற டேன்டீ தொழிலாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படும் என்று அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்தார்.

நீலகிரி

பந்தலூர்

ஓய்வு பெற்ற டேன்டீ தொழிலாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படும் என்று அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்தார்.

வீடுகள் ஒதுக்கீடு

பந்தலூர் தாலுகா அய்யன்கொல்லி அருகே காரக்கொல்லியில் குடிசை மாற்று வாரியம் சார்பில், அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு உள்ளது. அங்குள்ள வீடுகள் டேன்டீயில் ஓய்வு பெற்று வீடுகள் இல்லாத தொழிலாளர்களுக்கு வழங்கப்பட இருக்கிறது. இதுதொடர்பாக வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் அடுக்குமாடி குடியிருப்புகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் வீடுகள் ஒதுக்கியது குறித்து டேன்டீ அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

அப்போது அதிகாரிகள் சேரங்கோடு, நெல்லியாளம், சேரம்பாடி, பாண்டியார் டேன்டீ பகுதிகளில் ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், பெரும்பாலானோர் அங்கு குடியேற சம்மதம் தெரிவிக்கவில்லை என்றனர். இதைத்தொடர்ந்து அந்த வீடுகளில் குடியேறுபவர்கள் அனைவருக்கும் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படும். அங்கு ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் குடியேற வேண்டும் என்று அமைச்சர் கூறினார்.

அடிப்படை வசதிகள்

மேலும் சாலையோரங்களில் வசிப்போர், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு கூடுதலாக வீடுகள் கட்ட கொடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது என்றார். இதையடுத்து சேரம்பாடி டேன்டீ தொழிற்சாலையை அமைச்சர் மதிவேந்தன் ஆய்வு செய்தார். அப்போது இந்த தொழிற்சாலை வருவாய் இழப்பு காரணமாக சிதிலமடைந்து கிடக்கிறது என்றனர். அதற்கு அமைச்சர் இதுகுறித்து முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்றார்.

ஆய்வின் போது டேன்டீ நிர்வாக இயக்குனர் வெங்கடேஷ், பொது மேலாளர் அசோக்குமார், கூடலூர் வன கோட்ட அலுவலர் ஓம்காரம், கோட்ட மேலாளர்கள் புஸ்பராணி, சிவகுமார், ஸ்ரீதர், வட்டார வளர்ச்சி அலுவலர் அண்ணாதுரை, குடிசை மாற்று வாரிய உதவி செயற்பொறியாளர் சுதர்சன், உதவி பொறியாளர் விவேக், முன்னாள் எம்.எல்.ஏ. திராவிடமணி, மாவட்ட ஊராட்சி தலைவர் பொன்தோஸ், சேரங்கோடு ஊராட்சி துணை தலைவர் சந்திரபோஸ் மற்றும் பலர் உடனிருந்தனர்.


Next Story