பிரதமர் மோடியின் தியானத்திற்கு தடை விதிக்க வேண்டும் - செல்வப்பெருந்தகை


பிரதமர் மோடியின் தியானத்திற்கு தடை விதிக்க வேண்டும் - செல்வப்பெருந்தகை
x

விவேகானந்தர் மண்டபத்தில் அமர்ந்து தியானம் செய்வதற்கு பிரதமர் மோடிக்கு உரிமை இல்லை என்று காங். தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

2024 மக்களவைத் தேர்தல் இறுதி பரப்புரை முடிந்து, 30-ம் தேதி (நாளை) கன்னியாகுமரிக்கு வருகை புரிந்து, அங்குள்ள விவேகானந்தர் மண்டபத்தில் மூன்று நாட்கள் தியானம் செய்வதென நரேந்திர மோடி திட்டமிட்டிருக்கிறார். இறுதிகட்ட தேர்தல் நடைபெற இருக்கிற 57 மக்களவைத் தொகுதிகளில் அரசியல் ஆதாயம் தேடுவதற்காக விவேகானந்தர் பாறையில் தியானம் செய்ய பிரதமர் மோடி தேர்வு செய்திருப்பதைவிட ஒரு அரசியல் மோசடி வேறு எதுவும் இருக்க முடியாது. பதவிக்காக நரேந்திர மோடி எவ்வளவு தரம் தாழ்ந்த நிலைக்கும் செல்வார் என்பதற்கு இந்தத் 'தியான நாடகம்" ஒரு உதாரணமாகும்.

நரேந்திர மோடி விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் தன்னந்தனியாக தியானம் செய்கிற மூன்று நாட்களும் அங்கு சுற்றுலா பயணிகள் எவரும் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இந்த தடை மக்களின் அடிப்படை உரிமைகளை பறிக்கிற செயலாகும். இதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன்.

விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் அமர்ந்து தியானம் செய்வதற்கு பிரதமர் மோடிக்குக் கடுகளவும் சட்டப்படி உரிமை இல்லை என்பதை இங்கே உறுதியாகச் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். விவேகானந்தர் மண்டபத்தில் அமர்ந்து தியானம் செய்வது, பா.ஜ.க.வுக்கு ஆதரவாக நேரடியாகவோ, மறைமுகமாகவோ, தொலைக்காட்சி ஊடகங்கள் மூலமாக வாக்களிக்கத் தூண்டுகிற பரப்புரையாகவே கருதவேண்டும். இதன்மூலம் தேர்தல் நடத்தை விதிமுறைகளை ஒரு பிரதமரே அப்பட்டமாக மீறுகிற செயலாகும். இது தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிரானதாகும்.

பிரதமர் நரேந்திர மோடியின் தியானம் மேற்கொள்கிற நடவடிக்கைக்குத் தேர்தல் ஆணையம் தடைவிதிக்க வேண்டும் என்று தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரியிடமும், அதற்கு அனுமதி அளிக்கக் கூடாதென்று தமிழ்நாடு தலைமைக் காவல்துறை அதிகாரியிடமும் நேரில் சந்தித்து வலியுறுத்த தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் இன்று கோரிக்கை மனு அளிக்க இருக்கிறோம். இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கிற வகையில், பிரதமர் மோடி, விவேகானந்தர் மண்டபத்தில் அமர்ந்து தியானம் செய்ய தடைவிதிக்க வேண்டும் என்று கோருகிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story