நாய்கள் கடித்து படுகாயம்: சிறுமியின் மருத்துவ செலவை மாநகராட்சி ஏற்றுக்கொள்ளும் - ராதாகிருஷ்ணன்


நாய்கள் கடித்து படுகாயம்: சிறுமியின் மருத்துவ செலவை மாநகராட்சி ஏற்றுக்கொள்ளும் - ராதாகிருஷ்ணன்
x
தினத்தந்தி 6 May 2024 2:58 PM IST (Updated: 6 May 2024 6:53 PM IST)
t-max-icont-min-icon

நாய்கள் கடித்ததில் பலத்த காயமடைந்த சிறுமிக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சென்னை,

சென்னை ஆயிரம் விளக்கு மாடல் பள்ளி சாலையில் உள்ள மாநகராட்சி பூங்கா அருகே வசிக்கும் புகழேந்தி என்பவர் தான் வளர்க்கும் இரண்டு நாய்களுடன் பூங்காவுக்கு வந்துள்ளார். அப்போது பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமி சுதக்ஷாவை இரு நாய்களும் கடித்துள்ளன. குழந்தையின் அலறல் கேட்டு வந்த தாய் சோனியா குழந்தையை காப்பாற்ற முயன்றுள்ளார். அப்போது அவரையும் நாய்கள் கடித்துள்ளன. நாய்கள் கடித்ததில் பலத்த காயமடைந்த சிறுமிக்கு மருத்துவமனையில் தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், குழந்தையை நாய்கள் கடித்த சம்பவம் குறித்து மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் கூறும்போது:

"நாய்கள் கடித்து சிறுமி படுகாயம் அடைந்த விவகாரத்தில் நாய்களின் உரிமையாளர் புகழேந்தி, அவரது மனைவி தனலட்சுமி, மகன் வெங்கடேசன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மத்திய அரசு தடை செய்துள்ள 23 வகை நாய்களில், ராட்வீலர் வகையும் ஒன்றாகும். எந்த உரிமமும் இன்றி ராட்வீலர் நாயை வளர்த்து வந்துள்ளனர். நாய்களின் உரிமையாளருக்கு மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. எந்த வளர்ப்பு பிராணியாக இருந்தாலும் லைசென்ஸ் பெற வேண்டும். நாய்களுக்கு, அனைத்து தடுப்பூசிகளும் போடப்பட வேண்டும். சிறுமிக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய வேண்டும். சிறுமியின் மருத்துவச் செலவுகள் அனைத்தும் சென்னை மாநகராட்சி ஏற்றுக்கொள்ளும்." இவ்வாறு அவர் கூறினார்.


Next Story