ஆயுதபூஜை, முகூர்த்த நாட்களை முன்னிட்டு கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்வு - மேலும் 3 நாட்களுக்கு விலை அதிகரிக்க வாய்ப்பு
ஆயுதபூஜை, முகூர்த்த நாட்களை முன்னிட்டு கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்ந்துள்ளது. மேலும் 3 நாட்களுக்கு விலை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
முகூர்த்த நாட்கள் உள்ளிட்ட பண்டிகை காலங்களில் பொதுவாக பூக்கள் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து காணப்படும். அந்த வகையில் ஆயுதபூஜை பண்டிகைக்கு முன்னதாகவே பூக்கள் விலை அதிகரித்து காணப்படுகிறது. ஆயுதபூஜைக்கு முந்தைய நாட்களில் முகூர்த்த நாட்கள் வந்ததால் அதன் விலை உயர்ந்து இருப்பதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.
அதன்படி, நேற்றும் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள் விலை கடுமையாக உயர்ந்திருந்தது. நேற்று முன்தினம் ஒரு கிலோ ரூ.400-க்கு விற்கப்பட்ட மல்லிகைப் பூ நேற்று ரூ.600-க்கும், ரூ.300-க்கு விற்பனையான முல்லைப்பூ ரூ.500-க்கும், சாதிப்பூ ரூ.350-க்கு விற்ற நிலையில், நேற்று ரூ.450-க்கு விற்பனை ஆனது.
இதேபோல், கனகாம்பரம் பூ நேற்று முன்தினம் ரூ.400-க்கு விற்பனையான நிலையில், நேற்று ரூ.700-க்கு விற்கப்பட்டது. மேலும் சாமந்தி, சம்பங்கி, ரோஸ், அரளி, செண்டுமல்லி ஆகிய பூக்களின் விலையும் நேற்று முன்தினத்தைவிட கிலோவுக்கு ரூ.30 முதல் ரூ.100 வரை அதிகரித்து இருந்தது.
மல்லிகைப் பூ வரத்து குறைவால் விலை அதிகரித்து இருப்பதாக கூறப்படும் நிலையில், மற்ற பூக்களை பொறுத்தவரையில் தேவைகள் அதிகமாக இருப்பதால் விலை உயர்ந்து இருப்பதாக சென்னை கோயம்பேடு மார்க்கெட் பூ வியாபாரி அருள் விசுவாசம் தெரிவித்தார்.
ஆயுதபூஜை மற்றும் முகூர்த்த நாட்களை முன்னிட்டு, இன்று (வெள்ளிக்கிழமை) முதல் நாளை மறுதினம் (ஞாயிற்றுக்கிழமை) வரை மேலும் பூக்களின் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும், கோயம்பேடு மார்க்கெட்டில் மல்லிகைப் பூ ஒரு கிலோ ரூ.1,000 தொடவும் வாய்ப்பு இருப்பதாகவும் வியாபாரிகள் கூறுகின்றனர்.