மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி
செய்யது அம்மாள் அறிவியல் கலைக்கல்லூரியில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
பனைக்குளம்,
ராமநாதபுரம் அருகே செய்யது அம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் டாக்டர் இ.எம்.அப்துல்லா கலையரங்கத்தில் 'ஆரோக்கியமான இளம் தலைமுறை' என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் பாலகிருஷ்ணன் வரவேற்றார். செய்யது அம்மாள் அறக்கட்டளை உறுப்பினர் மற்றும் செய்யது அம்மாள் அறக்கட்டளை மருத்துவமனை டாக்டர் பாத்திமா சானாஸ் பரூக் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதில் பெண் உரிமை ஆர்வலர் பாத்திமா சபரிமாலா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசும் போது, செல்போனை தேவைக்கு மட்டும் பயன்படுத்த வேண்டும். சமுதாயத்தில் வளம் பெறுவது கட்டமைப்பிற்கு அப்பாற்பட்டது. படித்தால் வளம் பெறுவீர்கள். படித்தால் மட்டுமே தனது லட்சிய பயணத்தை நோக்கி நகர முடியும் என்றார்.
2-ம் ஆண்டு கணினி அறிவியல் துறை மாணவி சமீமா சிரினின் கவிதை நூலை பாத்திமா சபரிமாலா வெளியிட்டு அதனை டாக்டர் பாத்திமா சானாஸ் பரூக் பெற்றுக் கொண்டார். இதைத்தொடர்ந்து செய்யது அம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தாளாளர் செல்லதுரை அப்துல்லா, செய்யது அம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் ராஜாத்தி அப்துல்லா ஆகியோர் மாணவிக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டனர். முடிவில் நுண்ணுயிரியல் துணைத்தலைவர் ரஞ்சித் குமார் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் நிர்வாக அலுவலர் சாகுல் ஹமீது மற்றும் மேற்பார்வையாளர் சபியுல்லா ஆகியோர் செய்திருந்தனர்.