பெண்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரம்
திருவாரூர் ரெயில் நிலையத்தில் பொதுமக்களுக்கு பெண்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இந்தியாவில் உள்ள ரெயில் நிலையங்களிலும் கடந்த 1-ந்தேதி முதல் பெண்கள் பாதுகாப்பு, குழந்தைகள் கடத்தல், போதை பொருட்கள் கடத்தல் ஆகியவை குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என்று இந்தியன் ரெயில்வே சார்பில் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கு அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி திருச்சி மண்டல முதுநிலை கோட்ட பாதுகாப்பு ஆணையர் ராமகிருஷ்ணன் உத்தரவின் படி திருவாரூர் ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் உதயசந்திரன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் துரைசாமி, தலைமை காவலர்கள் சுரேஷ்குமார், உமா மற்றும் போலீசார் திருவாரூர் ரெயில் நிலையத்தில் பொதுமக்களுக்கு பெண்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அப்போது பெண்களுக்கு என்று தனியாக ரெயிலில் பெட்டிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த பெட்டியில் ஏதேனும் ஆண் நபர் ஏறினால் உடனே ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவேண்டும். ஜன்னல் அருகே அமர்ந்து இருக்கும் பெண்கள் தாங்கள் அணிந்து இருக்கும் நகையை பாதுகாத்து கொள்ள வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.