செங்குன்றத்தில் போக்குவரத்து நெரிசல் ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் திடீர் ஆய்வு
செங்குன்றத்தில் காலை, மாலை நேரங்களில் அதிகமான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. செங்குன்றத்தை சுற்றியுள்ள 50-க்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் அனைத்து பொருட்களையும் வாங்க செங்குன்றத்துக்கு வரவேண்டியது உள்ளது. மேலும் ஆந்திராவிலிருந்து செங்குன்றத்தில் உள்ள அரிசி ஆலைகளுக்கு நெல் மூட்டைகளை ஏற்றி வரும் லாரிகள் அதிகமாக வருகின்றன. ஆட்டோக்கள் எண்ணிக்கையும் அதிகரித்துவிட்டதாலும், சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
செங்குன்றத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை சீர்செய்ய வேண்டும் என ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கருக்கு பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கைகள் வைக்கப்பட்டன. இதையடுத்து நேற்று போலீஸ் கமிஷனர் சங்கர் செங்குன்றத்துக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்னர் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கு உடனடியாக தீர்வு காணப்படும் என அவர் தெரிவித்தார்.
அப்போது அவருடன் செங்குன்றம் போலீஸ் மாவட்ட துணை கமிஷனர் பாலகிருஷ்ணன், போக்குவரத்து துணை கமிஷனர்கள் ஜெயலட்சுமி, ஜெயகரன், உதவி கமிஷனர் மலைச்சாமி, இன்ஸ்பெக்டர் சோபிதாஸ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.