வளிமண்டல கீழடுக்கு சுழற்சி: தமிழகத்தில் மேலும் 3 நாட்கள் மழை நீடிக்கும்


வளிமண்டல கீழடுக்கு சுழற்சி: தமிழகத்தில் மேலும் 3 நாட்கள் மழை நீடிக்கும்
x

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மேலும் 3 நாட்கள் மழை நீடிக்கும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை கடந்த மாதம் 28-ந் தேதி தொடங்கியது. தொடக்கத்தில் லேசான மழைப்பொழிவு இருந்தது. அதன்பின்னர் மழை அளவு அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இந்தநிலையில் வங்க கடலில் கடந்த 10-ந் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.

இதையடுத்து தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது. காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிரமாக வலுப்பெற்றதால் அதி கனமழை பெய்தது. குறிப்பாக சீர்காழியில் 122 ஆண்டுகள் இல்லாதவகையில் 44 செ.மீ. மழை பதிவாகி, அந்த ஊரில் பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடாயின. சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் போன்ற மாவட்டங்களிலும் விடாது மழை கொட்டியது.

இடி, மின்னலுடன் மழை

சென்னையில் நேற்றுமுன்தினம் இரவு முதல் விடிய விடிய மழை பெய்தது. நேற்று அதிகாலை வேளையில் இடி, மின்னலுடன் கனமழை கொட்டியது. மழையுடன் காலைப்பொழுது விடிந்தாலும், 10 மணிக்கு மேல் வெயில் லேசாக எட்டிப் பார்த்தது. அதன்பின்னர் வானம் மேகமூட்டத்துடன் இருப்பதும், அவ்வப்போது லேசான தூறலுமாக மழை கண்ணா மூச்சி ஆடியது.

இந்தநிலையில் கேரள, தமிழக பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி உருவானது. இதன் காரணமாக தமிழகத்தில் மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த மையத்தின் இயக்குனர் பா.செந்தாமரைகண்ணன் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

3 நாட்களுக்கு மழை நீடிக்கும்

கேரள, தமிழக பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக 14-ந் தேதி (இன்று) முதல் 16-ந் தேதி வரையிலான 3 நாட்கள் தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்துக்கு (இன்று) வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும்.

மீனவர்களுக்கு எச்சரிக்கை

லட்சத்தீவு பகுதிகள் மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் 14-ந் தேதி (இன்று) சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும். அதேபோல 16-ந் தேதி தென்கிழக்கு வங்கக்கடலின் கிழக்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் வீச வாய்ப்புண்டு. 17-ந் தேதி தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்.

எனவே மேற்கண்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்லவேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

உத்திரமேரூரில் அதிக மழை

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் அதிகபட்சமாக 17 செ.மீ. மழை பதிவாகி இருக்கிறது. திருத்தணியில் 13 செ.மீ., கொடுமுடியில் 12 செ.மீ., மதுராந்தகம், திண்டிவனத்தில் தலா 11 செ.மீ., சூளகிரி, ஆலங்காயம், நாட்றம்பள்ளியில் தலா 10 செ.மீ. மழை பெய்துள்ளது.

சின்னார் அணை, ஊத்துக்கோட்டை, கொடைக்கானல், குன்றத்தூர், செம்பரம்பாக்கம், சின்னக்கல்லார், வல்லம் போன்ற பகுதிகளிலும் பரவலான மழை பதிவாகி இருக்கிறது.


Next Story