அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை சொட்டு நீர் பாசன முறையாக மாற்றலாம்;கொ.ம.தே.க. பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் எம்.எல்.ஏ. பேச்சு


அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை  சொட்டு நீர் பாசன முறையாக மாற்றலாம்;கொ.ம.தே.க. பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் எம்.எல்.ஏ. பேச்சு
x

அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை சொட்டு நீர் பாசன முறையாக மாற்றலாம் என்று கொ.ம.தே.க. பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் எம்.எல்.ஏ. கூறினார்.

ஈரோடு

அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை சொட்டு நீர் பாசன முறையாக மாற்றலாம் என்று கொ.ம.தே.க. பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் எம்.எல்.ஏ. கூறினார்.

திருப்பி ஒப்படைப்பு

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் விவசாய அணி சார்பில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ஈரோட்டில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்துக்கு ஒருங்கிணைப்பாளர் நித்தியானந்தம் தலைமை தாங்கினார். எம்.பி.க்கள் சின்ராஜ், சண்முகசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். கொ.ம.தே.க. மாநில பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் எம்.எல்.ஏ. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

விவசாயத்துறை லாபகரமாக இல்லை என்ற எண்ணம் நிலவுகிறது. உண்மையில், மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் விவசாயத்துறைக்கு பல கோடி ரூபாய் செலவழிக்கிறது. ஆனால் அந்த நிதி பயன்படுத்தப்படாமல் திருப்பி ஒப்படைக்கப்படுகிறது. குறிப்பாக ஒரு மூட்டை யூரியா உரத்துக்கு ரூ.2 ஆயிரத்து 400 மானியமாக வழங்கப்படுகிறது என்பது கூட விவசாயிகளுக்கு தெரிவது இல்லை.

சொட்டு நீர் பாசனம்

மத்திய அரசு வழங்கும் மானியங்களை புரிந்து கொள்ள ஆர்வம் காட்டவில்லை. விவசாயத்துறையில் குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படுகிறது. எனவே, அமெரிக்கா மற்றும் சிங்கப்பூரில் உள்ளவர்கள் விவசாயம் செய்ய பொள்ளாச்சிக்கு வந்துள்ளனர். ஆண்டுதோறும் லட்சக்கணக்கான ரூபாய் லாபம் ஈட்டுகின்றனர். உண்மையில், அதிகபட்ச லாபம் 5 சதவீதமாக இருக்கும் தொழில்களில் இவ்வளவு லாபம் பெற முடியாது.

கொங்கு மண்டலத்தில் தண்ணீர் பற்றாக்குறை உள்ளது. எனவே, சொட்டு நீர் பாசனத்திற்கு மானியம் பெறலாம். அத்திக்கடவு -அவினாசி திட்டத்தை சொட்டு நீர் பாசன முறையாகவும் மாற்றலாம். பாமாயில் மீதான 35 சதவீத இறக்குமதி வரி நீக்கப்பட்டது. அதனால், உள்ளூர் எண்ணெய் உற்பத்தியாளர்களுக்கு லாபம் கிடைக்கவில்லை. விவசாயத்துறை லாபகரமாக இல்லை என்பதை தெரிவிக்காமல், விவசாயிகள் அதை அரசுக்குத்தெரிவிக்க வேண்டும்.

ரூ.20 லட்சம் கோடி

இந்த ஆண்டு விவசாயத்துறைக்கு ரூ.20 லட்சம் கோடி கடன் வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆனால் விவசாயிகள் அந்த கடனை முழுமையாக பெறவில்லை. அவர்கள் தனியார் நிதியாளர்களிடம் செல்கின்றனர். எனவே, விவசாயிகள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதையொட்டி பொள்ளாச்சியில் வருகிற ஏப்ரல் மாதம் 18 மற்றும் 19-ந்தேதிகளில் கொ.ம.தே.க. சார்பில் விவசாயம் காப்போம் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற உள்ளது. அதில் கலந்து கொண்டு பல தகவல்களை பெறலாம்.

இவ்வாறு அவர் கூறினார்


Next Story