சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உண்டியல் காணிக்கை ரூ.2.60 கோடி
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.2.60 கோடி கிடைத்துள்ளது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.2.60 கோடி கிடைத்துள்ளது.
உண்டியல் காணிக்கை
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் உண்டியல் ஒவ்வொரு மாதமும் எண்ணப்படும். இந்த மாதம் (ஜனவரி) தொடக்கத்தில் உண்டியல் எண்ணும் பணி நேற்று முன்தினம் தொடங்கி 2 நாட்கள் நடந்தது.
கோவில் அறங்காவலர் குழு தலைவர் இரா.அருள்முருகன் தலைமையில், இணை ஆணையாளர் கார்த்திக் முன்னிலையில் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது. இதில், தூத்துக்குடி உதவி ஆணையர் சங்கர், ஆய்வர்கள் செந்தில்நாயகி, சண்முகராஜா, முப்பிடாதி, அறங்காவலர் குழு தலைவரின் நேர்முக உதவியாளர் செந்தமிழ் பாண்டியன், பொதுமக்கள் பிரதிநிதிகள் வேலாண்டி, மோகன், கருப்பன், சுப்பிரமணியன் மற்றும் சிவகாசி பதினெண் சித்தர் மடம் குருகுல வேதபாடசாலை உழவாரபணி குழுவினர், தூத்துக்குடி ஸ்ரீ ஜெய்மங்கள ஆஞ்சநேயர் உழவாரப் பணிக்குழு மற்றும் கோவில் பணியாளர்கள் ஈடுப்பட்டனர்.
ரூ.2.60 கோடி
உண்டியல் காணிக்கையாக மொத்தம் ரூ.2 கோடியே 60 லட்சத்து 48 ஆயிரத்து 45 கிடைத்துள்ளது. மேலும் தங்கம் 1 கிலோ 168 கிராமும், வெள்ளி 17 கிலோ 300 கிராமும், 512 வெளிநாட்டு பணமும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.