பண்ணாரி மாரியம்மன் கோவிலில்பூச்சாட்டுதலுடன் குண்டம் விழா தொடங்கியது
பண்ணாரி மாரியம்மன் கோவிலில், பூச்சாட்டுதலுடன் குண்டம் விழா தொடங்கியது. 100 கிராமங்களுக்கு திருவீதி உலாவும் புறப்பட்டது.
சத்தியமங்கலம்
பண்ணாரி மாரியம்மன் கோவிலில், பூச்சாட்டுதலுடன் குண்டம் விழா தொடங்கியது. 100 கிராமங்களுக்கு திருவீதி உலாவும் புறப்பட்டது.
பூ உத்தரவு
சத்தியமங்கலம் அருகே உள்ள பிரசித்திபெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் குண்டம் திருவிழா நடைபெறும். தமிழ்நாடு மட்டுமின்றி கர்நாடகாவை சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் குண்டம் விழாவில் கலந்துகொள்வார்கள். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.
இந்த ஆண்டு குண்டம் விழா அடுத்த மாதம் (ஏப்ரல்) 4-ந் தேதி நடக்கிறது. இதற்காக நேற்று அதிகாைல அம்மனிடம் பூ உத்தரவு கேட்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதைக்காண நேற்று முன்தினம் இரவே சிக்கரசம்பாளையம், சிக்கரசம்பாளையம் புதூர், வெள்ளியம்பாளையம், வெள்ளியம்பாளையம்புதூர், காளி திம்பம் ஆகிய 5 ஊர்களை சேர்ந்த பக்தர்கள் தனித்தனியாக தாரை தப்பட்டை முழங்க கோவிலுக்கு வந்திருந்தனர்.
பூச்சாட்டுதல்
இதையடுத்து கோவில் முறைதாரர் அம்மனின் படைக்கலத்தை தலையில் வைத்தபடி பண்ணாரியை சுற்றியுள்ள சிவன், மாரியம்மன், சருகு மாரியம்மன், ராகு, கேது, முனியப்பன் சாமி, வண்டி முனியப்பன் சாமி கோவில்களுக்கு சென்று சிறப்பு பூஜைகள் செய்தார்.
பின்னர் நேற்று அதிகாலை 4 மணி அளவில் பண்ணாரி அம்மன் சிலை மீது வெள்ளை அரளி மற்றும் சிகப்பு அரளி பூ வைத்து குண்டம் விழாவுக்கு உத்தரவு கேட்கப்பட்டது. அப்போது வெள்ளை பூ விழுந்ததால் அம்மன் குண்டம் விழாவுக்கு உத்தரவு கொடுத்துவிட்டதாக கோவிலில் இருந்த பக்தர்கள் 'அம்மா பண்ணாரி தாயே' என்று பக்தி கோஷம் எழுப்பினார்கள். தொடர்ந்து காலை 5 மணி அளவில் பூச்சாட்டுதலுடன் குண்டம் விழா தொடங்கியது.
திருவீதி உலா
இதைத்தொடர்ந்து நேற்று இரவு பண்ணாரி உற்சவ அம்மன் மற்றும் சருகு மாரியம்மன் சப்பரத்தில் 100 கிராமங்களுக்கு திருவீதி உலா புறப்பட்டது. அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் அம்மன் சிலைகள் சிக்கரசம்பாளையம் சென்று அங்குள்ள அம்மன் கோவிலில் தங்கவைக்கப்பட்டது. இதற்கிடையே பண்ணாரி கோவில் வளாகத்தில் பக்தர்கள் காத்திருக்க பிரமாண்ட பந்தல் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
தொடர்ந்து வருகிற 28-ந் தேதி கம்பம் சாட்டப்படுகிறது. அடுத்த மாதம் 4-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) அதிகாலை முக்கிய நிகழ்ச்சியான குண்டம் விழா நடக்கிறது.
5-ந் தேதி கோவிலில் திருவிளக்கு பூஜையும், 6-ந் தேதி மஞ்சள் நீராட்டு விழாவும், 7-ந் தேதி தங்கத்தேர் இழுக்கும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. 10-ந் தேதி மறுபூஜையுடன் விழா நிறைவுபெறுகிறது.