கோவில்பட்டி, சாத்தான்குளம், ஓட்டப்பிடாரத்தில்குற்ற செயல்களில் ஈடுபட்டவர்கள் திருந்தி வாழ விழிப்புணர்வு நிகழ்ச்சி
கோவில்பட்டி, சாத்தான்குளம், ஓட்டப்பிடாரத்தில் குற்ற செயல்களில் ஈடுபட்டவர்கள் திருந்தி வாழ விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
கோவில்பட்டி (கிழக்கு):
கோவில்பட்டி, சாத்தான்குளம், ஓட்டப்பிடாரத்தில் போலீஸ்துறை சார்பில் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் திருந்தி வாழ விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
விழிப்புணர்வு நிகழ்ச்சி
கோவில்பட்டி போலீஸ் துணைக் கோட்டத்திற்கு உட்பட்ட போலீஸ் நிலையங்களில் பல குற்ற செயல்களில் ஈடுபட்டு ஜாமீனில் வெளி வந்தவர்கள், தொடர் குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீண்டும் எந்த சூழ்நிலையிலும் எவ்வித குற்ற செயல்களிலும் ஈடுபடக் கூடாது என்பதை அறிவுறுத்தும் வகையில் "புதிய பாதை" விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. கோவில்பட்டியிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு போலீஸ் துணைசூப்பிரண்டு வெங்கடேஷ் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் வழக்கறிஞர் ராமசுப்பிரமணியன், உளவியலாளர் முனைவர் பாலாஜி ஆகியோர் பேசினர். நிகழ்ச்சியில் மீண்டும் எந்த சூழ்நிலையிலும் எவ்வித குற்ற செயல்களிலும் ஈடுபடக் கூடாது, பழிக்குப்பழி வாங்கும் எண்ணம், கோபத்தை கட்டுப்படுத்த முடியாததால் ஏற்படும் நிகழ்வுகள், போதை பழக்கத்திற்கு அடிமையாக இருப்பதால் ஏற்படும் தகராறு, பய உணர்ச்சி இல்லாதது உள்ளிட்ட பல்வேறு சூழ்நிலைகளில் குற்ற செயல்களில் ஈடுபடுவதால் ஏற்படும் பின் விளைவுகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
இதில் கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் வனசுந்தர், சப்-இன்ஸ்பெக்டர்கள் அங்குத்தாய், சத்யா, தர்மராஜ் மற்றும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள், குற்ற செயல்களில் ஈடுபட்டு ஜாமீனில் வெளி வந்தவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஓட்டப்பிடாரம்
இதேபோன்று மணியாச்சி போலீஸ்துறை உபகோட்டம் சார்பில் புதிய பாதை என்ற வழிகாட்டு நிகழ்ச்சி ஓட்டப்பிடாரத்திலுள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு மணியாச்சி போலீஸ் துணை சூப்பிரண்டு லோகேஸ்வரன் தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி மனநல மருத்துவர் சிவசைலம், அரசு வழக்கறிஞர் பூங்குமார் ஆகியோர் பேசினார். இதில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் தர்மர் (புளியம்பட்டி), சுதந்திர தேவி (மணியாச்சி), சப் இன்ஸ்பெக்டர்கள் சுந்தரம், சதீஷ் நாராயணன் மற்றும் போலீசார், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
சாத்தான்குளம்
சாத்தான்குளம், மெஞ்ஞானபுரம், தட்டார்மடம், நாசரேத் போலீஸ் நிலைய பகுதியில் உள்ளவர்களுக்கு மாற்றத்தை தேடி விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் நடந்த கூட்டத்துக்கு போலீஸ் துணை சூப்பிரண்டு அருள் தலைமை தாங்கினார். இன்ஸ்பெக்டர் முத்து முன்னிலை வகித்தார். நாசரேத் சப்-இன்ஸ்பெக்டர் ராய்ஸ்டன் வரவேற்றார். இதில் அரசு மருத்துவர் ஆத்திக்குமார், டாக்டர் ஜெய்கணேஷ், பிசியோதெரபிஸ்ட் லட்சுமி, சித்த மருத்துவர் மதுரம் செல்வராஜ் மற்றும் பலர் பேசினர்.
இதில் சப்-இன்ஸ்பெக்டர்கள் விஜயகுமார், விஜயதாஸ் மற்றும் பொதுமக்கள், போலீசார் கலந்து கொண்டனர். சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ் நன்றி கூறினார்.