மாணவ-மாணவிகள் உயர்கல்வி பயில உதவிகள் செய்கிறது


மாணவ-மாணவிகள் உயர்கல்வி பயில  உதவிகள் செய்கிறது
x

நான் முதல்வன் திட்டம் மாணவ-மாணவிகள் உயர்கல்வி பயில உதவிகள் செய்கிறது என மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆனந்தகுமார் கூறினார்.

விருதுநகர்


நான் முதல்வன் திட்டம் மாணவ-மாணவிகள் உயர்கல்வி பயில உதவிகள் செய்கிறது என மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆனந்தகுமார் கூறினார்.

கல்வியின் தரம்

விருதுநகர் சத்திரரெட்டியபட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் கலெக்டர் மேகநாத ரெட்டி மற்றும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளர் ஆனந்தகுமார் ஆகியோர் நான் முதல்வன் திட்டம் குறித்து மாணவ-மாணவிகளுடன் கலந்துரையாடினர். இத்திட்டம் மாணவர்களின் கல்வியின் தரத்தை மேம்படுத்தவும், திறன் மேம்பாட்டை ஊக்குவிக்கவும் செயல்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. கலந்துரையாடலின் போது கண்காணிப்பு அலுவலர் ஆனந்தகுமார் கூறியதாவது:-

மாணவ-மாணவிகள் உயர் கல்விக்கு தேவையான வழிகாட்டுதல் மற்றும் உதவிகள் செய்ய மாவட்ட நிர்வாகம் தயாராக இருக்கிறது. நான் முதல்வன் திட்டம் மாணவ-மாணவிகள் உயர்கல்வி பயில உதவிகள் செய்கிறது எனவே மாணவர்கள் உயர்கல்வி பயில்வதற்கு முன்னால் தங்களுக்கென்று ஒரு இலக்கினை வைத்து சிறந்த கல்லூரியை தேர்வு செய்து கல்வி பயின்று வாழ்க்கையில் நல்ல நிலையை அடைய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

வழிகாட்டி புத்தகம்

கலெக்டர் மேகநாத ரெட்டி கூறுகையில்,

தமிழக அரசின் மூலம் உயர் கல்வி பயில்வதற்கான வாய்ப்புகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்படுகிறது. படிக்கின்ற காலத்தில் நல்ல முறையில் கல்வி பயின்று மாணவர்கள் உயர் கல்வி பயில்வதற்கான வாய்ப்புக்களை பற்றி அறிந்து கொள்ள இத்திட்டம் உதவுகிறது என்றார்.

இதனை தொடர்ந்து மாணவ-மாணவிகளுக்கு உலகை வெல்லும் உயர்கல்வி வேலை வழிகாட்டி என்ற வழிகாட்டி புத்தகம் வழங்கப்பட்டது. முன்னதாக 2021-2022-ம் கல்வியாண்டில் சத்திரரெட்டியபட்டி அரசு மேல்நிலைப்பள்ளி சிறப்பாக செயல்பட்டமைக்காக பள்ளியின் தலைமை ஆசிரியருக்கு பள்ளி மேம்பாட்டுபணிகள் மேற்கொள்ள 2023-2024-ம் நிதியாண்டில் ரூ.25 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்த கண்காணிப்பாளர் மற்றும் கலெக்டர் தங்களது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.

இதில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞான கவுரி, கல்வி திட்ட ஒருங்கிணைப்பாளர்கள், மாணவ- மாணவிகள், பெற்றோர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story