நண்பனிடம் வீடியோ பதிவு செய்யக்கூறி கிணற்றில் குதித்தவர் சாவு
சேத்துப்பட்டு அருகே நண்பனிடம் வீடியோ பதிவு செய்யச்சொல்லி கிணற்றில் குதித்த வாலிபர் பரிதாபமாக இறந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
வீடியோ
சேத்துப்பட்டை அடுத்த கரிப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை. சென்னையில் கட்டிட மேஸ்திரியாக உள்ளார். இவரது மகன்கள் சச்சின், கிரண் (வயது 19). ஏழுமலை சென்னையில் குடும்பத்துடன் தங்கி வசித்து வருகிறார்.
கிரண் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் சொந்த ஊரான கரிப்பூர் கிராமத்தில் உள்ள குல தெய்வ கோவிலில் நடந்த திருவிழாவுக்காக இவர்கள் வந்தனர்.
கிரண் தனது நண்பரான ரமேஷ் என்பவரையும் திருவிழாவுக்கு அழைத்து வந்தார். இருவரும் நேற்று அந்த பகுதியில் உள்ள கிணற்றில் குளிக்க சென்றனர். அப்போது ரமேசிடம் கிரண், நான் கிணற்றறில் குதிப்பதை நீ செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட வேண்டும் என்றார்.
நண்பன் கூறியதை ஏற்றுக்கொண்ட ரமேஷ் அதன்படி கிரண் கிணற்றில் குதிக்கும்போது வீடியோ எடுத்தார். ஆனால் கிரணுக்கு நீச்சல் தெரியாததால் அவர் தண்ணீரில் தத்தளித்தார். அதிர்ச்சியடைந்த ரமேஷ் கூச்சலிட்டார்
கூச்சல்
உடனே அந்த பகுதியில் இருந்தவர்கள் அங்கு கூடி னர். அதற்குள் கிரண் நீரில் மூழ்க தொடங்கினார். இதனையடுத்து தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.
விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் கிணற்றுக்குள் இறங்கி தேடும் பணியில் ஈடுபட்டனர். தண்ணீர் அதிகமாக இருந்ததால் அதனை மின்மோட்டார் மூலம் தீயணைப்பு படையினர் வெளியேற்ற நடவடிக்கை எடுத்தனர்.
இந்த நிலையில் 6 மணி நேர போராட்டத்துக்கு பின்னர் கிரணை அவர்கள் பிணமாக மீட்டு போலீசில் ஒப்படைத்தனர்.
அதன்பின் கிரண் உடலை பிரேத பரிசோதனைக்காக போலீசார் சேத்துப்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து சேத்துப்பட்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
சமூக வலைதளத்தில் பதிவிடுவதற்காக சாகசம் செய்வதாக நினைத்து வீடியோவில் பதிவிட்டபடி கிணற்றில் குதித்தவர் பரிதாபமாக இறந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.