தூய்மை இந்தியா திட்டத்தை பிரதமர் மோடி கொண்டுவந்ததன் விளைவாக 6 ஆண்டுகளில் நாடு தூய்மையாக மாறிவிட்டது - மத்திய மந்திரி எல்.முருகன்
தூய்மை இந்தியா 2.0 திட்டத்தின்கீழ் மத்திய அரசின் இணை அலுவலகங்கள் சுத்தமாக பராமரிக்கப்படுகிறதா என மத்திய இணை மந்திரி எல்.முருகன் சென்னை ராயபுரத்தில் உள்ள அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
சென்னை:
தூய்மை இந்தியா 2.0 திட்டத்தின்கீழ் மத்திய அரசின் இணை அலுவலகங்கள் சுத்தமாக பராமரிக்கப்படுகிறதா? அதற்காக மேற்கொள்ளப்படும் ஆக்கப்பூர்வமான பணிகள் குறித்து ஆய்வு செய்ய மத்திய மீன்வளம், கால்நடை, பால்வளத்துறை இணை மந்திரி எல்.முருகன், சென்னை ராயபுரத்தில் உள்ள மத்திய மீன்வள நிறுவனம், கடல் மற்றும் என்ஜினீயரிங் பயிற்சி பிரிவு அலுவலகத்துக்கு இன்று வந்தார். அப்போது அலுவலக வளாகத்துக்குள் சுற்றி ஆய்வு மேற்கொண்ட மத்திய இணை மந்திரி எல்.முருகன், அங்கு படித்து வரும் மாணவர்களும் கலந்துரையாடினார்.
அதன் பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் எல்.முருகன் பேசியதாவது:-
தூய்மை இந்தியா திட்டத்தை பிரதமர் மோடி கொண்டுவந்ததன் விளைவாக 6 ஆண்டுகளில் நாடு தூய்மையாக மாறிவிட்டது. தூய்மை பற்றிய விழிப்புணர்வு நம் மக்கள் மத்தியில் வந்திருக்கிறது. அதனைத் தொடர்ந்து தூய்மை இந்தியா 2.0 இயக்கம் மூலம் அரசு அலுவலகங்கள் குறிப்பாக மத்திய அரசாங்கத்தின் இணை அலுவலகங்களை தேவையில்லாத பேப்பர்கள், உபயோகப்படுத்தாத பொருட்கள் ஆகியவற்றை அகற்றி தூய்மையாக வைத்திருக்க நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டது.
2021-ம் ஆண்டு பட்ஜெட்டில் 5 நவீன மீன்பிடி துறைமுகங்கள் உருவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு ரூ.1,200 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் சென்னையில் உள்ள காசிமேடு மீன்பிடி துறைமுகமும் வருகிறது. உலகத்தரத்தில் இந்து மீன்பிடி துறைமுகம் மாற்றியமைக்கப்பட உள்ளது. இதற்கு மட்டும் ரூ.97 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது. விரைவில் பணிகள் தொடங்க இருக்கிறோம்.
அதேபோல், முதல் முறையாக ராமேஸ்வரத்தில் ரூ.126 கோடியில் கடல்பாசி பூங்கா அமைப்பதற்கு ஒப்புதலுக்காக காத்திருக்கிறது. மீனவ தாய்மார்களுக்கு இது ஒரு நல்ல திட்டமாக இருக்கும். மீன் உற்பத்தி, ஏற்றுமதியில் இந்தியா 2-வது இடத்தில் உள்ளது. இறால் ஏற்றுமதியில் முதலிடத்தில் இருக்கிறது. கொரோனா காலகட்டத்தில் கூட 32 சதவீதம் ஏற்றுமதியை அதிகரித்து இருக்கிறோம். இதுதான் நம்முடைய முயற்சி, என கூறினார்.
அதனைத்தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
நம்முடைய கடற்படையினர், நம் மீனவர்களை துப்பாக்கியால் சுட்ட விவகாரம் தொடர்பாக அறிக்கையை கேட்டு இருக்கிறோம். அந்த அறிக்கை வந்த பிறகு, முழு விவரங்களை தெரிவிப்போம். காப்பீட்டு திட்டத்தில் மீனவர் இருந்தால் அவருக்கான இழப்பீடு வழங்கப்படும். ஒவ்வொரு மீனவரின் படகுகளிலும் ஜி.பி.எஸ். கருவியை பொருத்துங்கள் என்று அறிவுறுத்தியிருக்கிறோம்.
மீனவர்கள் எல்லை தாண்டும் சம்பவம் அடிக்கடி நடக்கிறது. மீன்வளத் துறைக்காக மத்திய அரசாங்கத்தின் திட்டங்கள் என்ன?, நிதி எவ்வளவு வழங்கப்படுகிறது? என்பது மாநில அரசுக்கு தெரியும். 2 ஆண்டுகளில் மட்டும் ரூ.2 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என அவர் கூறினார்.