தமிழக பா.ஜனதா பொறுப்பாளராக அரவிந்த் மேனன் நியமனம்


தமிழக பா.ஜனதா பொறுப்பாளராக அரவிந்த் மேனன் நியமனம்
x

தமிழக பா.ஜனதா பொறுப்பாளராக அரவிந்த் மேனன் மீண்டும் நியமிக்கப்பட்டு உள்ளார்.

சென்னை,

சமீபத்தில் 400-க்கு மேல் என்ற முழக்கத்துடன் நாடாளுமன்ற தேர்தலை சந்தித்த பா.ஜனதா கட்சி எதிர்பார்த்த அளவுக்கு சோபிக்கவில்லை. தனித்து 240 இடங்களிலேயே அது நின்றுவிட்டது. இந்த சரிவை அந்த கட்சி ஆராய்ந்து வருகிறது. கட்சியின் பின்புலமான ஆர்.எஸ்.எஸ்.சும் தீவிர ஆலோசனையில் உள்ளது.இந்த ஆலோசனைகளின் அடிப்படையில் கட்சியை மேலும் வலுப்படுத்த நிர்வாகிகள் மாற்றம் நடந்து வருகிறது.

இதன்படி பீகார் மற்றும் ராஜஸ்தான் மாநில தலைவர்கள் மாற்றப்பட்டு உள்ளனர். அதன்படி பீகார் மாநில தலைவராக திலீப் ஜெய்ஸ்வால், ராஜஸ்தான் மாநில தலைவராக மதன் ரத்தோர் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். இதைப்போல சில மாநிலங்களுக்கு மேலிட பொறுப்பாளர்கள் நியமனமும் நடந்துள்ளது. இதன்படி தமிழ்நாட்டு பொறுப்பாளராக அரவிந்த் மேனன் மீண்டும் நியமிக்கப்பட்டு இருக்கிறார். துணை பொறுப்பாளராக சுதாகர் ரெட்டி நியமிக்கப்பட்டார். அரவிந்த் மேனன், லட்சத்தீவுக்கும் பொறுப்பாளர் ஆகியிருக்கிறார்.

அசாம் பொறுப்பாளராக ஹரிஷ் திவேதியும், சண்டிகார் பொறுப்பாளராக அதுல் கார்க் எம்.பி.யும், திரிபுரா பொறுப்பாளராக ராஜ்தீப் ராயும் நியமிக்கப்பட்டு உள்ளனர். ராஜஸ்தான் பொறுப்பாளராக ராதாமோகன்தாஸ் அகர்வாலும், துணை பொறுப்பாளராக விஜய ரகாத்கரும் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள்.இந்த வரிசையில் தேர்தலுக்கு பிறகு 29 நியமனங்கள் நடந்துள்ளன. இந்த நியமனங்களின் மூலம் ஆர்.எஸ்.எஸ். ஆதிக்கம் செலுத்துவதாக கூறப்படுகிறது. 29 நியமனங்களில் 20 நிர்வாகிகள் ஆர்.எஸ்.எஸ். பிரமுகர்கள் என தெரிய வந்துள்ளது.

கட்சியை மறு சீரமைப்பு செய்யும் பணியில் ஆர்.எஸ்.எஸ். தீவிரம் காட்டி வருவதாக அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள். இதனால் மேலும் சில மாநிலங்களில் பா.ஜனதா தலைமை மாறும் என்றும், புதிய நிர்வாகிகள் நியமனம் நடைபெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story