கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்கலைஞர் மகளிர் உரிமை தொகை வழங்கும் திட்டம் :அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்தார்


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்கலைஞர் மகளிர் உரிமை தொகை வழங்கும் திட்டம் :அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 15 Sep 2023 6:45 PM GMT (Updated: 15 Sep 2023 6:45 PM GMT)

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை தொகை வழங்கும் திட்டத்தை அமைச்சர் எ.வ.வேலு வழங்கி தொடங்கி வைத்தார்.

கள்ளக்குறிச்சி


தமிழகத்தில் மகளிருக்கு மாதம் ரூ.1000 வழங்கும் வகையில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை சென்னையில் தமிழக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

அதை தொடர்ந்து, மாவட்டங்களில் நடந்த விழாவில் அமைச்சர்கள் கலந்து கலந்து கொண்டு, இத்திட்டத்தை தொடங்கி வைத்தார்கள். அந்த வகையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், சங்கராபுரம் ஒன்றியம், மூரார்பாளையம் ஊராட்சியில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்ட தொடக்க விழா நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் சங்கராபுரம் உதயசூரியன், ரிஷிவந்தியம் வசந்தம் கார்த்திகேயன், உளுந்தூர்பேட்டை மணிக்கண்ணன், கவுதமசிகாமணி எம்.பி., சங்கராபுரம் ஒன்றிய குழு தலைவர் திலகவதி நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட வருவாய் அலுவலர் சத்யநாராயணன் வரவேற்றார்.

பெண்களுக்கு சம உரிமை

சிறப்பு அழைப்பாளராக பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ. வேலு கலந்து கொண்டு, பயனாளிகளுக்கு உரிமை தொகை பெறுவதற்கான ஏ.டி.எம். அட்டையை வழங்கி தொடங்கி வைத்து, பேசினார்.

அப்போது அவர் பேசுகையில், முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பெண்களுக்கு சம உரிமை, மகளிர் சுய உதவி குழு, தையல் மெஷின் வழங்கும் திட்டங்களை செயல்படுத்தினார். தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மகளிர் உரிமை தொகை திட்டத்தை தொடங்கி வைத்து இருக்கிறார். மற்ற மாநிலங்கள் தமிழகத்தின் திட்டங்களை பார்த்து செயல்படுத்துகின்ற அளவிற்கு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது படத்திற்கு அமைச்சர் எ.வ.வேலு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதில் தனித்துணை கலெக்டர் ராஜலட்சுமி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அங்கையற்கண்ணி, தாசில்தார் குமரன், வட்டார வளர்ச்சி அலுவலரகள் அய்யப்பன், செல்வகணேஷ், பேரூராட்சி மன்ற தலைவர் ரோஜாரமணி தாகப்பிள்ளை, தொழிலதிபர் ஆறுகதிரவன், ஒன்றிய கவுன்சிலர்கள் தனவேல், சாந்தி, குமாரி, ஊராட்சி மன்ற தலைவர்கள் காந்திமதி, பாப்பாத்தி, அன்பு, ஜீவா, செந்தாமரை, முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story