கைதான ரவுடி வரிச்சியூர் செல்வத்திடம்போலீஸ் காவல் விசாரணை நிறைவு


கைதான ரவுடி வரிச்சியூர் செல்வத்திடம்போலீஸ் காவல் விசாரணை நிறைவு
x

கூட்டாளி கொலை வழக்கில், 5 நாள் போலீஸ் காவல் விசாரணை முடிந்து பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வம் நேற்று விருதுநகர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் அவர் மதுரை சிறையில் அடைக்கப்பட்டார்.

விருதுநகர்


கூட்டாளி கொலை வழக்கில், 5 நாள் போலீஸ் காவல் விசாரணை முடிந்து பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வம் நேற்று விருதுநகர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் அவர் மதுரை சிறையில் அடைக்கப்பட்டார்.

கூட்டாளி கொலை

விருதுநகர் அல்லம்பட்டியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வத்தின் கூட்டாளி ஆவார். இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

இந்தநிலையில், இரட்டைக்கொலை வழக்கில் தன்னை செந்தில்குமார் காட்டிக் கொடுக்கக்கூடும் என கருதிய வரிச்சியூர் செல்வம், தனது மற்ற கூட்டாளிகளை ஏவி சென்னையில் செந்தில்குமாரை சுட்டுக்கொன்று, உடலை கொண்டு வந்து துண்டாக்கி தாமிரபரணி ஆற்றில் வீசிய பயங்கரம் அம்பலமாகி பரபரப்பை ஏற்படுத்தியது. எனவே கூட்டாளி செந்தில்குமார் கொலை வழக்கில் வரிச்சியூர் செல்வம் கைது செய்யப்பட்டார். அவரை 5 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க விருதுநகர் முதலாவது மாஜிஸ்திரேட்டு கவிதா அனுமதி அளித்திருந்தார்.

போலீஸ் உதவி சூப்பிரண்டு கருன்காரட் தலைமையிலான தனிப்படை போலீசார், அருப்புக்கோட்டையில் வைத்து வரிச்சியூர் செல்வத்திடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

கோர்ட்டில் ஆஜர்

சென்னையில் செந்தில்குமாரை கொலை செய்தது எப்படி, உடலை வாகனத்தில் ஏற்றி கொண்டு வந்தது எப்படி, அவரது உடல் பாகங்கள் எங்கெங்கு தாமிரபரணி ஆற்றில் வீசப்பட்டன, எத்தனை பேர் இணைந்து இந்த சம்பவத்தை செய்தனர்? என்பன பற்றிய அதிர்ச்சி தகவல்களை வரிச்சியூர் செல்வம் போலீசாரிடம் கூறி இருப்பதாக தெரியவருகிறது. அதன்பேரில் இந்த கொலையில் தொடர்புடைய அவருடைய மற்ற கூட்டாளிகளை தேடும் பணியை போலீசார் முடுக்கி விட்டுள்ளனர்.

இந்தநிலையில் நேற்றுடன் கோர்ட்டு வழங்கிய போலீஸ் காவல் முடிந்த நிலையில், ஏற்கனவே கோர்ட்டு உத்தரவிட்டபடி வரிச்சியூர் செல்வத்தை தனிப்படை போலீசார் பலத்த பாதுகாப்புடன் விருதுநகர் கோர்ட்டுக்கு அழைத்து வந்தனர். மாஜிஸ்திரேட்டு கவிதா முன்பு ஆஜர்படுத்தினர். பின்னர் வரிச்சியூர் செல்வத்தை வருகிற 5-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது. அதன் பேரில் வரிச்சியூர் செல்வம், மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.


Next Story