கோடை விடுமுறைக்கு பிறகு 6 முதல் 12-ம் வகுப்புகளுக்கு இன்று பள்ளிகள் திறப்பு முதல் நாளிலேயே நோட்டு, புத்தகங்கள் வினியோகம் செய்ய ஏற்பாடு
கோடை விடுமுறைக்கு பிறகு கடலூர் மாவட்டத்தில், 6 முதல் 12-ம் வகுப்புகள் இன்று (திங்கட்கிழமை) திறக்கப்படுகிறது. முதல் நாளிலேயே நோட்டு, புத்தகங்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் கடந்த ஏப்ரல் மாதம் 29-ந்தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட்டது. விடுமுறை முடிந்து 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புகளுக்கு ஜூன் 1-ந்தேதியும், 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்புகளுக்கு கடந்த 5-ந்தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
ஆனால் பள்ளிகள் திறக்கும் நேரத்தில் தமிழகம் முழுவதும் கோடை வெயில் கொளுத்தியது. கடலூரில் 104.5 டிகிரி வெயில் தாக்கியது. தற்போதும் 100 டிகிரியை தாண்டி வெயில் பதிவாகி வருகிறது. இதையடுத்து பள்ளிகள் திறக்கும் நேரத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை வைத்தனர். இதை ஏற்ற தமிழக அரசு ஜூன் 7-ந்தேதி திறக்கப்படும் என்று மாற்றியது. தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களிலும் வெயிலின் தாக்கம் குறையாததால், 2-வது முறையாக பள்ளிகள் திறக்கும் தேதியை தள்ளி வைத்து தமிழக அரசு உத்தரவிட்டது.
தூய்மை பணிகள்
அதன்படி 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்புகளுக்கு வருகிற 14-ந்தேதியும், 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புகளுக்கு 12-ந் தேதியும் (அதாவது இன்று) பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து பள்ளிகள் திறப்பதற்கு முன்பு அனைத்து தூய்மை பணிகளையும் மேற்கொள்ளவும், பள்ளிகள் திறக்கும் முதல் நாளே மாணவர்களுக்கு நோட்டு, புத்தகங்கள் வழங்க வேண்டும் என்றும் பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டது. இதனால் கடலூர் மாவட்டத்தில் முதன்மை கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன் உத்தரவின்பேரில் பள்ளிகளில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பள்ளி வளாகம், வகுப்பறையில் உள்ள குப்பைகளை அகற்றி, தூய்மை பணி செய்யப்பட்டது. வகுப்பறையை தண்ணீர் விட்டு கழுவி சுத்தம் செய்யப்பட்டது. வளாகத்தில் வளர்ந்து நின்ற செடிகள், முட்புதர்களை பொக்லைன் எந்திரம், ஆட்கள் மூலம் அகற்றி சுத்தம் செய்யப்பட்டது. இந்த பணிகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன் ஆய்வு செய்தார்.
நோட்டு, புத்தகம்
தொடர்ந்து கோடை விடுமுறை முடிந்து கடலூர் மாவட்டத்தில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு 849 பள்ளிகள் இன்று (திங்கட்கிழமை) திறக்கப்படுகிறது. இது பற்றி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கூறுகையில், கடலூர் மாவட்டத்தில் கோடை விடுமுறை 6 முதல் 12-ம் வகுப்புகள் வரை 849 பள்ளிகள் திறக்கப்படுகிறது. 1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை மறுநாள் (புதன் கிழமை) 1371 பள்ளிகள் திறக்கப்படுகிறது.
ஏற்கனவே மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தலின் பேரில், அனைத்து பள்ளிகளிலும் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் இணைந்து இந்த பணிகளை செய்தனர். மேலும் பள்ளி திறக்கும் முதல் நாளில் மாணவர்களுக்கு நோட்டு, புத்தகம் வழங்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டதால், அதற்கேற்ப அனைத்து பள்ளிகளுக்கும் ஏற்கனவே நோட்டு, புத்தகம் அனுப்பி விடப்பட்டது. இன்று அனைத்து மாணவர்களுக்கும் நோட்டு, புத்தகம் வழங்கப்படும் என்றார்.