பஸ் மீது கார் மோதல் மனைவியுடன் ராணுவவீரர் பலி


பஸ் மீது கார் மோதல் மனைவியுடன் ராணுவவீரர் பலி
x
தினத்தந்தி 27 May 2023 12:15 AM IST (Updated: 27 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

திருவெண்ணெய்நல்லூா் அருகே அரசு பஸ் மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் மனைவியுடன் ராணுவ வீரர் பரிதாபமாக உயிரிழந்தார்

விழுப்புரம்

திருவெண்ணெய்நல்லூர்

ராணுவவீரர்

விழுப்புரம் மாவட்டம் முகையூர் புதுக்காலனியை சேர்ந்தவர் சகாயராஜ்(வயது 46). இந்திய ராணுவத்தில் சிக்கிம் பகுதியில் சுபேதாரராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி பிாிட்டோமேரி(40). இவர், திருவண்ணாமலை மாவட்டம் மதுராம்பட்டு கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். இந்த தம்பதிக்கு ஷெரின்(8), ரின்சி(5) ஆகிய 2 மகள்கள் உள்ளனர்.

இந்த நிலையில் ஒருமாத விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்த சகாயராஜ், தனது மனைவி மற்றும் மகள்கள், தங்கை புனிதாமேரி(27) ஆகியோருடன் காரில் கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றார். அங்கு பல்வேறு இடங்களை சுற்றி பார்த்த அவர்கள் நேற்று காலை காரில் அங்கிருந்து சொந்த ஊருக்கு புறப்பட்டனர்.

டயர் வெடித்தது

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூரை அடுத்த சித்தானங்கூர் கிராமத்தில் உள்ள சிறிய பாலம் அருகே நேற்று மதியம் வந்தபோது திடீரென காரின் முன்புறம் வலது பக்க டயர் வெடித்தது.

இதனால் தாறுமாறாக ஓடிய கார், சாலையின் தடுப்புச்சுவரை இடித்து விட்டு மறுபக்கம் சென்னையில் இருந்து ஜெயங்கொண்டம் நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பஸ் மீது மோதியது. இதில் இதில் காரின் முன்பகுதி அப்பளம்போல் நொறுங்கியது. பஸ்சின் முன்பகுதியும் சேதமானது.

கணவன், மனைவி பலி

இந்த விபத்தில் சகாயராஜ், பிரிட்டோ மேரி ஆகிய இருவரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்கள். படுகாயம் அடைந்த ஷெரின், ரின்சி, புனிதாமேரி, பஸ் டிரைவரான அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அம்பாவூர் கிராமத்தை சேர்ந்த விஜயகுமார்(48), கண்டக்டரான கடலூர் அண்ணாநகரை சேர்ந்த லோகேஷ்(47) ஆகிய 5 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

போக்குவரத்து பாதிப்பு

இந்த விபத்து காரணமாக சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுபற்றிய தகவல் அறிந்து வந்த திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையிலான போலீசார் பலியான கணவன், மனைவி ஆகியோரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்துக்குள்ளான கார் மற்றும் அரசு பஸ்சை கிரேன் மூலம் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

குடும்பத்துடன் கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்று விட்டு வீடு திரும்பும் வழியில் நடந்த விபத்தில் மனைவியுடன் ராணுவ வீரர் பலியான சம்பவத்தால் முகையூர் புதுக்காலனி பகுதி சோகத்தில் மூழ்கியுள்ளது.


Next Story