மனைவி, குழந்தைகளை துரத்தி விட்டு கள்ளக்காதலியை வீட்டிற்கு அழைத்து வந்த ராணுவ வீரர் - குமரியில் பரபரப்பு சம்பவம்
தனிமையில் வாழ்ந்து வந்த பெண்ணுக்கும், முன்னாள் ராணுவ வீரருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது.
குமரி,
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 58 வயதுடைய முன்னாள் ராணுவ வீரருக்கு மனைவியும், 2 மகன்களும் உண்டு. 2 மகன்களில் ஒருவர் மன நோயாளியாகவும், மற்றொருவர் கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளியாகவும் உள்ளனர். ராணுவ வீரர் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின்பு தேன் பெட்டிகள் வைத்து தேன் சேகரிக்கும் தொழில் செய்து வருகிறார். இதில் நல்ல வருமானம் கிடைக்கவே வீட்டின் அருகில் புதிதாக வீடு ஒன்று கட்டி வருகிறார்.
இவர் தொழில் தொடர்பாக பல்வேறு இடங்களுக்கு சென்று வருவது வழக்கம். அவ்வாறு செல்லும் போது மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்த 50 வயதுடைய ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டது. அந்த பெண்ணுக்கு 3 பிள்ளைகள் உள்ளனர். அவர்களுக்கு திருமணமாகி தனித்தனியாக குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள். பெண்ணின் கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதையடுத்து தனிமையில் வாழ்ந்து வந்த பெண்ணுக்கும், முன்னாள் ராணுவ வீரருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது.
அவர்கள் 2 பேரும் பல்வேறு இடங்களில் தனிமையில் சுற்றித் திரிந்தனர். பல இடங்களுக்கு சென்று தனிமையில் இருந்து வந்தனர். ராணுவ வீரர் சொந்த வீட்டை மறந்து கள்ளக்காதலியின் வீட்டிலேயே அதிக நேரம் இருந்தார். இதனால் சந்தேகப்பட்ட மனைவி ரகசியமாக உறவினர் மூலமாக விசாரித்த போது கள்ளக்காதல் விவகாரம் அம்பலமானது. இதனால் முன்னாள் ராணுவ வீரருக்கும் அவருடைய மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ராணுவ வீரர், 'தனது காதலியுடன்தான் இருப்பேன்' என கூறினார்.
அதற்கு மனைவி 'சரி வெளியில் தானே போய் வருகிறார்' என்று தனது குழந்தைகளுக்காக சமாதானம் அடைந்தார். ஆனால் மறுநாள் முன்னாள் ராணுவ வீரர் மோட்டார் சைக்கிளில் கள்ளக்காதலியுடன் வீட்டுக்கு வந்தார். அவர் கள்ளக்காதலியுடன் அறைக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டு ஜாலியாக இருந்தார்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மனைவி திருவட்டார் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். போலீசார் வீட்டுக்கு வந்து கதவை தட்டினர். அப்போது வெளியே வந்த முன்னாள் ராணுவ வீரர், போலீசாரை நோக்கி துப்பாக்கியை காட்டி சுட்டு விடுவேன் என்று மிரட்டினார்.
போலீசார் அவரிடம் இருந்து நைசாக துப்பாக்கியை வாங்கினர். அத்துடன் அதன் உரிமத்தை ரத்து செய்ய பரிந்துரை செய்தனர். அதன் பின் சமாதானம் அடைந்த முன்னாள் ராணுவ வீரர், 'இனிமேல் ஒழுங்காக இருப்பேன்' என்று கூறினார். அத்துடன் கள்ளக்காதலியை அவரது வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.
இந்தநிலையில் மீண்டும் கள்ளக்காதலிைய தனது மோட்டார் சைக்கிளில் அழைத்துக் கொண்டு பல்வேறு இடங்களுக்கு சென்றார். 2 நாட்களுக்கு முன் கள்ளக்காதலியை அழைத்துக் கொண்டு மீண்டும் வீட்டுக்கு வந்தார். வீட்டில் ஒரு அறையில் கள்ளக்காதலியை தங்க வைத்தார். இதனால் அவருக்கும், மனைவிக்கும் இடையே தகராறு முற்றியது. இதையடுத்து மனைவியையும், மாற்றுத்திறனாளிகளான 2 குழந்தைகளையும் வீட்டை விட்டு வெளியே துரத்தினார்.
இதைபார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை கண்டித்தனர். அதற்கு அவர், 'கள்ளக்காதலி என்னுடன்தான் இருப்பார்' என்று உறுதியாக கூறினார். அத்துடன் கள்ளக்காதலியை அழைத்து கொண்டு வீட்டின் மாடியில் உள்ள அறைக்கு சென்று கதவை மூடி விட்டார். அந்த பகுதியில் உள்ளவர்கள் கதவை தட்டிய பிறகும் அவர் கதவை திறக்கவில்லை.
இதுகுறித்து திருவட்டார் போலீசாருக்கு தகவல் ெகாடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து கதவை உடைத்து முன்னாள் ராணுவ வீரரையும், கள்ளக்காதலியையும் வெளியே கொண்டு வந்தனர். அவர்களை போலீஸ் நிலையத்துக்கு போலீசார் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது, '2 பேருக்கும் குடும்பம் இருக்கிறது. அதனால் முன்னாள் ராணுவ வீரர் மனைவியுடன் தான் இருக்க வேண்டும், கள்ளக்காதலியுடன் குடும்பம் நடத்த முடியாது' என்று போலீசார் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.
ஆனால் அவர் மீண்டும் கள்ளக்காதலியுடன் வீட்டுக்கு வந்து அறையை பூட்டினார். இதனால் மனைவி ஊரில் உள்ளவர்களிடம் தெரிவித்தார். இதையடுத்து பொதுமக்கள் அங்கு கூடி முன்னாள் ராணுவ வீரரை கண்டித்தனர். அப்போது அவருக்கும் பொதுமக்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்து அங்கு வந்த திருவட்டார் போலீசார், முன்னாள் ராணுவ வீரரிடம், 'இனி இப்படி நடந்தால் சிறையில் தள்ளி விடுவோம்' என எச்சரித்தனர். இதையடுத்து கள்ளக்காதலி தலையை துணியால் மறைத்தபடி வீட்டில் இருந்து வெளியேறினார். அத்துடன் பிரச்சினை தீர்ந்தது என மனைவி ஆறுதல் அடைந்தார்.
ஆனால் முன்னாள் ராணுவ வீரர், தான் மனைவியுடன் வாழ மாட்டேன் என்று கூறிவிட்டு தற்போது கட்டி வரும் வீட்டில்சென்று தங்கினார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தியது.