ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு - கைதான 8 பேருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்


ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு - கைதான 8 பேருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்
x

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை,

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று இரவு சென்னை பெரம்பூரில் அவரது வீடு அருகே மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அவரது உடல் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. ஆம்ஸ்ட்ராங்கின் உடலை பெரம்பூரில் உள்ள பகுஜன் சமாஜ் கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய அனுமதிகோரி மாநகராட்சியிடம் மனு அளிக்கப்பட்டது.

குடியிருப்பு பகுதியில் உடலை அடக்கம் செய்ய பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளதாக தெரிவித்து சென்னை மாநகராட்சி நிர்வாகம் ஆம்ஸ்ட்ராங் உடலை அடக்கம் செய்ய அனுமதி வழங்கவில்லை. இதையடுத்து ஆம்ஸ்ட்ராங் உடலை கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய அனுமதி கோரி அவரது மனைவி பொற்கொடி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதி அனுமதி அளித்துள்ளார். இதையடுத்து இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங்கின் உடல் அயனாவரத்தில் உள்ள அவரது இல்லத்தில் குடும்பத்தினர் அஞ்சலிக்காக எடுத்துச் செல்லப்படுகிறது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 8 பேர் போலீசில் சரண் அடைந்தனர். சரண் அடைந்த 8 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கில் இன்று மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோகுல், விஜய், சிவசக்தி ஆகிய 3 பேரை கைது செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ள 11 பேரில் 8 பேருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து எழும்பூர் பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்ற பொறுப்பு நீதிபதி பரமசிவம் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து அவர்கள் 8 பேரும் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.


Next Story