ரெயில் பயணிகளிடம் வாக்குவாதம்; முன்பதிவு பெட்டியில் அத்துமீறி ஏறிய வடமாநிலத்தவர்கள்
கவுகாத்தி செல்லும் ரெயிலின் முன்பதிவு பெட்டியில் முன்பதிவு செய்யாமல் அத்துமீறி ஏறி அமர்ந்து ரெயில் பயணிகளிடம் வாக்குவாதம் செய்த வடமாநிலத்தவர்கள் இறக்கி விடப்பட்டனர்.
கவுகாத்தி ரெயில்
அசாம் மாநிலம் கவுகாத்தியில் மாணவ, மாணவியர்களின் சாரணர் இயக்கம் மற்றும் தேசிய மாணவர் படையைச் சேர்ந்தவர்களுக்கு சிறப்பு பயிற்சி நடைபெற உள்ளது. இதற்காக நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான பள்ளி கல்லூரி மாணவ, மாணவியர்கள் அங்கு செல்கின்றனர். இதற்கிடையே சென்னையிலிருந்து கல்லூரிகளில் உள்ள சாரணர் இயக்கம் மற்றும் தேசிய மாணவர் படையைச் சேர்ந்த மாணவ, மாணவியர்கள் ஒரு பிரிவினர் நியூ தின்சுகியா பெங்களூரு விரைவு வரையிலில் நேற்று புறப்பட்டனர். இந்த நிலையில் பெங்களூருவில் இருந்து பெரம்பூர் வழியாக கொருக்குப்பேட்டை மற்றும் திருவொற்றியூர் பகுதியை கடந்து செல்லக்கூடிய விரைவு ரெயிலில் பெரம்பூரில் இருந்து 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் அசாம் செல்லும் விரைவு ரெயிலில் ஏறினர்.
ரெயில் நிறுத்தம்
அப்போது தமிழக மாணவர்கள் முன்பதிவு செய்து வைத்திருந்த முன்பதிவு பெட்டிகளில் வட மாநிலத்தைச் சேர்ந்த சிலர் அத்துமீறி ஏறி இருக்கையை ஆக்கிரமித்து இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து, ரெயிலில் ஏறிய தமிழக மாணவ, மாணவியர்கள் வடமாநிலத்தவரிடம் இருக்கையை தரக்கூறி கேட்டப்போது அவர்கள் தர மறுத்து அட்டூழியம் செய்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது. இது குறித்து ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதைதொடர்ந்து, நேற்று காலை 10.10 மணியளவில் திருவொற்றியூர் ரெயில் நிலையம் வந்தபோது ரெயில் நிறுத்தப்பட்டது.
தாமதமாக சென்றது
தகவல் அறிந்து தண்டையார்பேட்டை மத்திய ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் திலீப், கொருக்குப்பேட்டை ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ், திருவொற்றியூர் சட்டம்-ஒழுங்கு இன்ஸ்பெக்டர் காதர் மொய்தீன் ஆகியோர் உள்பட 20-க்கும் மேற்பட்ட போலீசார் உடனடியாக விரைந்து வந்து ரெயிலில் ஏறினர்.
பின்னர், அங்கு முன்பதிவு செய்யாமல் அத்துமீறி ஏறி இருக்கையில் அமர்ந்திருந்து அட்டூழியம் செய்த 200 வட மாநிலத்தவர்களை கண்டித்ததுடன், அவர்களை கீழே இறக்கிவிட்டு அந்த இருக்கையில் தமிழக மாணவ, மாணவியர்களை அமர வைத்தனர். அதன் பின்னர் 1½ மணி நேரம் தாமதமாக காலை 11.43 மணிக்கு ரெயில் திருவொற்றியூர் ரெயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு சென்றது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.