ஐ.டி.பெண் ஊழியரிடம் பணப்பையை திருடிய அசாம் வாலிபர் கைது

திருப்பூர்:
கேரள மாநிலம் கொல்லம் பகுதியை சேர்ந்தவர் மீனாட்சி (வயது 24). இவர் பெங்களூருவில் ஐ.டி. ஊழியராக உள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் 21-ந் தேதி மீனாட்சி கேரள மாநிலம் காயங்குளத்தில் இருந்து பெங்களூருவுக்கு கொச்சுவேலி எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்தார். அப்போது தனது பையில் 1 செல்போன், 1 ஹெட்போன், 6 கிராம் தங்க சங்கிலி, ரூ.2,500 ஆகியவற்றை வைத்திருந்தார். தலைக்கு கீழ் வைத்து மீனாட்சி தூங்கியுள்ளார். நள்ளிரவில் மர்ம ஆசாமி அவருடைய பையை திருடிவிட்டு தப்பினான்.
இதுகுறித்து மீனாட்சி அளித்த புகாரின் பேரில் திருப்பூர் ரெயில்வே போலீசார் மற்றும் பாதுகாப்பு படை போலீசார் மர்ம ஆசாமியை தேடி வந்தனர். ரெயில் நிலையங்களில் பொருத்தியிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி விசாரித்தனர். இந்தநிலையில் திருப்பூர் ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோபால், ஏட்டு சரவணன், ரெயில்வே போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன், ஏட்டு ராஜ்குமார் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக அசாம் மாநிலம் மொவாமாரி பகுதியை சேர்ந்த சதாம் உசேனை (27) பிடித்தனர். அவரிடம் இருந்து 1 செல்போன் மற்றும் 3 கிராம் நகையை பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து திருப்பூர் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அப்புசாமி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து சதாம் உசேனை நேற்று கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.






