என்ஜினீயரிங் படிப்பு கலந்தாய்வுக்கான ஒருங்கிணைப்பு குழு நியமனம் - உயர்கல்வித்துறை அறிவிப்பு
என்ஜினீயரிங் படிப்புகளுக்கான கலந்தாய்வை நடத்துவதற்கு ஒருங்கிணைப்பு குழுவை நியமித்து உயர்கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை,
பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கான பொதுத் தேர்வு நிறைவு பெற்று, அவர்களின் விடைத்தாள் திருத்தும் பணியும் முடிவடைந்துவிட்டது. ஏற்கனவே அறிவித்திருந்த அட்டவணையின்படி, அடுத்த மாதம் (மே) 6-ந்தேதி தேர்வு முடிவு வெளியாக உள்ளது. அதற்கேற்றாற்போல், பள்ளிக்கல்வித் துறையின் கீழ் வரும் அரசு தேர்வுத் துறை பணியாற்றி வருகிறது.
இந்த நிலையில் பிளஸ்-2 முடிக்கும் மாணவர்களின் உயர்கல்வி தேர்வில் என்ஜினீயரிங் படிப்பை பெரும்பாலானோர் தேர்வு செய்வார்கள். அந்த வகையில் தேர்வு முடிவு வெளியான 2 வாரங்களில் என்ஜினீயரிங் படிப்புக்கான கலந்தாய்வு தொடங்கி நடைபெற உள்ளது.
இந்த நிலையில் பி.இ., பி.டெக்., பி.ஆர்க். போன்ற என்ஜினீயரிங் படிப்புகளுக்கான கலந்தாய்வை நடத்துவதற்கான ஒருங்கிணைப்புக் குழுவை அமைத்து உயர்கல்வித் துறை அரசாணை வெளியிட்டு இருக்கிறது.
இதுதொடர்பாக உயர்கல்வித் துறை முதன்மை செயலாளர் ஏ.கார்த்திக் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
2024-25-ம் கல்வியாண்டுக்கான முதலாம் ஆண்டு பி.இ., பி.டெக்., பி.ஆர்க். போன்ற என்ஜினீயரிங் படிப்புகளில் சேருவதற்கு ஆன்லைன் வாயிலாக கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. இந்த கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கையை மேற்கொள்வதற்கு ஒருங்கிணைப்பு குழு நியமிக்கப்பட்டு இருக்கிறது.
இந்த குழுவின் தலைவராக தொழில்நுட்ப கல்வி ஆணையரும், துணை தலைவராக அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தரும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களை தவிர, அண்ணா பல்கலைக்கழக பதிவாளர், தமிழ்நாடு மின் ஆளுமை ஆணையர், கல்லூரிக் கல்வி இயக்குனர், விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலர், மருத்துவ கல்வி தேர்வுக் குழு செயலாளர், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்ட மாநில இயக்குனர், கோவை அரசு தொழில்நுட்ப கல்லூரி முதல்வர், தொழில்நுட்ப கல்வி நிதி ஆலோசகர் மற்றும் தலைமை கணக்கு அலுவலர் ஆகியோர் உறுப்பினராகவும், கோவை அரசு தொழில்நுட்ப கல்லூரி எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் என்ஜினீயரிங் துறைத் தலைவர் டி.புருஷோத்தமன் உறுப்பினர் செயலராகவும் நியமிக்கப்பட்டு இருக்கின்றனர்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.