சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை - ரூ.1 லட்சம் சிக்கியது
சார்பதிவாளர் அப்ரோசின் பேன்ட் பாக்கெட்டில் ரூ.1 லட்சத்து 2 ஆயிரத்து 500 இருந்தது.
குமரி,
கன்னியாகுமரி அருகே கொட்டாரத்தில் சார் பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு சார் பதிவாளராக (பொறுப்பு) அப்ரோஸ் பணியாற்றி வருகிறார். தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த இவர் தற்போது நாகர்கோவிலில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் லஞ்சம் வாங்குவதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
இதைத் தொடர்ந்து குமரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு கூடுதல் போலீஸ் ஹெக்டேர் தர்மராஜ் தலைமையிலான போலீசார் நேற்று இரவு 9 மணி அளவில் சார் பதிவாளர் அலுவலகத்துக்கு சென்றனர். அப்போது அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு புறப்பட தயாராக இருந்த சார் பதிவாளர் அப்ரோசை தடுத்து போலீசார் சோதனை செய்தனர்.
சோதனையில் சார்பதிவாளர் அப்ரோசின் பேன்ட் பாக்கெட்டில் ரூ.1 லட்சத்து 2 ஆயிரத்து 500 இருந்தது. இந்த பணம் எங்கிருந்து வந்தது? என்பது குறித்து அப்ரோசிடம் போலீசார் விசாரித்தனர். ஆனால் அந்த பணத்துக்கான கணக்கை அவர் கூறவில்லை. இதனையடுத்து கணக்கில் வராத அந்த பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதேபோல சார் பதிவாளர் அலுவலக உதவியாளர் மோகன் பாபு என்பவரிடம் இருந்து ஆயிரம் ரூபாயை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் சார்பதிவாளர் அலுவலகத்திலும் போலீசார் சோதனை நடத்தினர். சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.