வறண்டு போன அன்னப்பாறை ஆறு; பாசனத்துக்கு தண்ணீர் தட்டுப்பாடு
வறண்டு போன அன்னப்பாறை ஆறு; பாசனத்துக்கு தண்ணீர் தட்டுப்பாடு
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை, இயற்கை எழில் கொஞ்சும் அழகிய வனப்பகுதிகளை கொண்டது. இங்குள்ள மேற்கு தொடர்ச்சி மலைக்குன்றுகளில் உற்பத்தியாகி 20 கிலோ மீட்டர் தூரம் ஊருக்குள் பாய்ந்தோடி உப்பாற்றில் சங்கமிக்கிறது, அன்னப்பாறை ஆறு.
தடுப்பணை
இந்த ஆற்றில் மழைக்காலங்களில் வெள்ளம் கரைபுரண்டு ஓடும். இவ்வாறு ஓடும் வெள்ளநீரை தடுத்து விவசாயத்துக்கும், குடிநீருக்கும் பயன்படுத்த சேத்துமடை காளியம்மன் கோவில் அருகே தடுப்பணை அமைக்கப்பட்டு உள்ளது.
மேலும் அங்கு ஆற்றை கடந்து செல்ல தரைமட்ட பாலமும் கட்டப்பட்டது. ஆனால் நாளடைவில் அந்த பாலம் சேதம் அடைந்துவிட்டது. இதனால் உயர்மட்ட பாலம் கட்டப்பட்டது. இந்த பாலம்தான், தற்போது பயன்பாட்டில் உள்ளது.
மழை இல்லை
அன்னப்பாறை ஆற்றின் இரு கரைகளிலும் ஆயிரக்கணக்கான ஏக்கரில் தென்னை, கோகோ, வாழை உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு உள்ளன. இதனால் விவசாயத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக அந்த ஆறு திகழ்கிறது. மேலும் சுற்றுவட்டார பகுதி மக்களின் குடிநீர் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கும் பயன்படுகிறது.
இந்த நிலையில் ஆனைமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில மாதங்களாக போதிய அளவில் மழை பெய்யவில்லை. குறிப்பாக கோடை மழை கூட கை கொடுக்கவில்லை.
ஆறு வறண்டது
இதன் காரணமாக அன்னப்பாறை ஆறு வறண்டு விட்டது. தற்போது அந்த ஆற்றில் தண்ணீரே ஓடவில்லை. ஆங்காங்கே குட்டை போன்று தண்ணீர் தேங்கியுள்ளது. மேலும் தண்ணீர் ஓடிய பகுதி மண்சாலை போல காட்சியளிக்கிறது. அங்கு சீமை கருவேல மரங்கள் ஆக்கிரமித்து உள்ளதை காண முடிகிறது.
இது மட்டுமின்றி கரையோரங்களில் உள்ள கிணறுகள் மற்றும் ஆழ்துளை கிணறுகளிலும் கூட தண்ணீர் இல்லை. இதன் காரணமாக பாசனத்துக்கு தண்ணீர் பற்றாக்குறை நிலவி வருகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர். மேலும் தண்ணீர் தட்டுப்பாடும் நிலவுகிறது.
தூர்வார வேண்டும்
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
அன்னப்பாறை ஆறு மூலம் ஆனைமலை, சேத்துமடை ஆகிய பகுதிகளில் விவசாயம் செழிக்கிறது. கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்த அளவில் பெய்யவில்லை. இந்த ஆண்டு கோடை மழையும் ஏமாற்றிவிட்டது. இதனால் வறட்சி ஏற்பட்டு, ஆற்றில் தண்ணீர் இல்லை. குடிக்க கூட தண்ணீர் இல்லாத மோசமான நிலை உருவாகி விட்டது.
அடுத்து மழை பெய்யும்போதுதான் ஆற்றில் தண்ணீர் வரும். அதற்கு முன்பு இரு கரைகளிலும் வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும். அதோடு ஆற்றை தூர்வார பொதுப்பணித்துறை அதிகாரிகள் முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.