கேது கோவிலில் அண்ணாமலை சாமி தரிசனம்
கேது பகவான் சன்னதியில் அர்ச்சனை செய்தும், விளக்கேற்றியும் அண்ணாமலை வழிபட்டார்.
மயிலாடுதுறை,
மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் அருகே கீழப்பெரும்பள்ளம் கிராமத்தில் சவுந்தர நாயகி சமேத நாகநாத சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் நவகிரகங்களில் சாயா கிரகம் என அழைக்கப்படும் கேது பகவானுக்கு தனி சன்னதி உள்ளது. இவரை வழிபட்டால் பல்வேறு நன்மைகளை பெறலாம் என புராண வரலாறுகள் கூறுகின்றன.
இந்நிலையில் இன்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கேது கோவிலுக்கு வருகை தந்தார். இதை அடுத்து விநாயகர், நாகநாத சுவாமி, சவுந்தரநாயகி மற்றும் கேது பகவான் சன்னதிகளில் அர்ச்சனை செய்து வழிபட்டார். இதனைத் தொடர்ந்து விளக்கேற்றியும் வழிபட்டார்.
கோவில் சார்பில் அவருக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. அவருடன் மாநில பா.ஜ.க. பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம், மயிலாடுதுறை மாவட்ட பா.ஜ.க. பொதுச் செயலாளர் பாலாஜி குருக்கள் ஆகியோர் சென்று இருந்தனர். அப்போது கோவிலுக்கு வந்த திரளான பக்தர்கள் அண்ணாமலையை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.