செமஸ்டர் தேர்வுகளுக்கான புதிய அட்டவணையை வெளியிட்டது அண்ணா பல்கலைக்கழகம்
மழை காரணமாக அண்ணா பல்கலை. மற்றும் அதன் உறுப்பு பொறியியல் கல்லூரிகளில் சில செம்ஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டிருந்தன.
சென்னை,
'மிக்ஜம்' புயல் காரணமாக சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூரில் அதிகனமழை கொட்டி தீர்த்தது. 36 மணி நேரம் இடைவிடாது கொட்டிய கனமழையால் சென்னை மாநகரமே தத்தளித்தது. இதன் காரணமாக, தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி கடல்போல் காட்சி அளிக்கிறது. மழை ஓய்ந்த பிறகும் வெள்ளம் வடியாததால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை சேர்ந்த மக்கள் மிகுந்த அவதி அடைந்துள்ளனர். கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் மற்றும் நிவாரண பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் சென்னையில் பெய்து வந்த தொடர் கனமழை காரணமாக அண்ணா பல்கலை. மற்றும் அதன் உறுப்பு பொறியியல் கல்லூரிகளில் சில செம்ஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டிருந்தன. இதற்கான மாற்று தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் பல்கலைக்கழகம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் தற்போது 'மிக்ஜாம்' புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட செமஸ்டர் தேர்வுகளுக்கான புதிய அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. அதன்படி டிச.11ம் தேதி தொடங்கி 2024 பிப்ரவரி 17ம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.