ஆஞ்சநேயர் ஜெயந்தி: 1,00,008 வடை மாலையில் காட்சி அளிக்கும் நாமக்கல் ஆஞ்சநேயர்...!
நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
நாமக்கல்
நாமக்கல் நகரின் மைய பகுதியில் பிரசித்திபெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு ஒரே கல்லினால் செதுக்கப்பட்ட 18 அடி உயர ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்த வகையில், இந்த ஆண்டு இன்று (வெள்ளிக்கிழமை) ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. விழாவை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 1,00,008 வடைமாலை சாத்தப்பட்டு திரை விலக்கப்பட்டு மகா தீபாராதணை நடைபெற்றது. இனைதொடர்ந்து 1,00,008 வடை மாலையில் நாமக்கல் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகிறார்.
இந்நிகழ்ச்சியில் இதில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, வனத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன், ராஜேஸ்குமார் எம்.பி., ராமலிங்கம் எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் அதிகாலை முதலே திரளான ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
பக்தர்கள் வரிசையாக சென்று தரிசனம் செய்ய வசதியாக போலீசார் இரும்பு கம்பிகளால் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து உள்ளனர். பக்தர்களின் வசதிக்காக கோட்டை சாலையில் இன்று ஒருநாள் மட்டும் வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டு உள்ளது.
இன்று 11 மணிக்கு வடை மாலை அலங்காரம் கலைக்கப்பட்டு, நல்லெண்ணைய், 1008 லிட்டர் பால், தயிர், திருமஞ்சள், சீயக்காய்தூள், பஞ்சாமிர்தர் போன்ற வாசனைப் பொருட்களால் சாமிக்கு சிறப்பு அபிசேகம் நடைபெறும். பின்னர் தங்கக்கவசம் அணிவிக்கப்பட்டு மதியம் 1 மணிக்கு மகா தீபாரதனை நடைபெறும்.