பேரூர் பட்டீசுவரர் கோவிலில் ஆனி உற்சவ நாற்று நடவு விழா


பேரூர் பட்டீசுவரர் கோவிலில் ஆனி உற்சவ நாற்று நடவு விழா
x
தினத்தந்தி 24 Jun 2023 10:45 PM GMT (Updated: 24 Jun 2023 10:45 PM GMT)

பேரூர் பட்டீசுவரர் கோவிலில் ஆனி உற்சவ நாற்று நடவு விழா நடந்தது.

கோயம்புத்தூர்

பேரூர் பட்டீசுவரர் கோவிலில் ஆனி உற்சவ நாற்று நடவு விழா நடந்தது.

பட்டீசுவரர் கோவில்

கொங்கு நாட்டில் உள்ள சிவன் தலங்களில் மிகவும் வரலாற்று சிறப்புமிக்கது பேரூர் பட்டீசுவரர் கோவில் ஆகும். இந்த கோவிலில், ஆண்டு தோறும் ஆனி உற்சவ நாற்று நடவு விழா வெகு சிறப்பாக நடப்பது வழக்கம்.

வேளாண் தொழில் செழித்து வளர வேண்டி, பட்டீசுவரரும், பச்சைநாயகி அம்மனும், தேவேந்திர குல வேளாளர் சமூகத்தினராக வேடம் தரித்து, பேரூர் பட்டீசுவரர் கோவிலுக்கு எதிரே உள்ள நாற்று நடவு வயலில் இறங்கி, நாற்று நட்டதாக பேரூர் புராணத்தில் கச்சியப்ப முனிவர் குறிப்பிட்டுள்ளார்.

நாற்று நடவு விழா

இத்தகைய, சிறப்பு வாய்ந்த ஆனி உற்சவ நாற்று நடவு விழா, கடந்த 15-ந் தேதி தொடங்கியது. அதைத்தொடர்ந்து, தேவேந்திர குல வேளாளர் மண்டபத்தில் நெல் விதையிடும் நிகழ்ச்சி நடத்தப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தது.

அதைத்தொடர்ந்து, நெற்பயிருக்கு காலை, மாலை சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு, பேரூர் கோவில் முன்பு நேற்று மாலை பொன்னேறு பூஜை நடந்தது. மண்டபத்தில் இருந்து நாற்று பயிர்கள் நாற்று நடவு வயலுக்கு கொண்டு வரப்பட்டது.

சிறப்பு பூஜை

பின்னர், நாற்று நடவு வயலுக்குள் மாடுகள் மூலம் கலப்பை கொண்டு உழப்பட்டு, கோவில் குருக்கள் வயலில் இறங்கி சிறப்பு பூஜை செய்தார்.

இதையடுத்து ஆண்கள், பெண்கள், இளம்பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்ளிட்டோர் ஆர்வத்துடன் வயலில் இறங்கி குலவையிட்டு நாற்று நட்டனர். இந்த நிகழ்ச்சியில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.


Next Story