வண்டலூர் உயிரியல் பூங்காவில் சுற்றுலா பயணிகளை கவரும் அனகோண்டா பாம்புகள்
வண்டலூர் உயிரியல் பூங்காவில் மஞ்சள் நிற அனகோண்டா பாம்புகள் சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது.
சென்னை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் ஏராளமான விலங்குகள் மற்றும் பறவைகள் பராமரிக்கப்படுகிறது. மத்திய உயிரியல் பூங்கா ஆணையத்தின் மூலம் விலங்குகள் பரிமாற்ற திட்டத்தின் கீழ் சென்னை முதலை பண்ணையில் இருந்து மஞ்சள் அனகோண்டா பாம்பு ஒரு ஜோடி கடந்த 2020-ம் ஆண்டு பெறப்பட்டது. இதை இங்கு பாம்பு பூங்காவில் தனியாக வைத்து ஊழியர்கள் பராமரித்து வந்தனர்.
வண்டலூரில் பூங்காவில் உள்ள தட்பவெப்ப சூழ்நிலைகள் மஞ்சள் அனகோண்டா பாம்புக்கு சாதகமாக அமைந்ததால் மஞ்சள் நிற அனகோண்டா பாம்புகள் இணை சேர்த்து 6 குட்டிகளை ஈன்றது. இதனை தொடர்ந்து அந்த 6 குட்டிகளை தாய் பாம்புகளிடம் பிரித்து தனியாக வைத்து ஊழியர்கள் பராமரித்து வந்தனர்.
இந்த நிலையில் அந்த பாம்புகள் தற்போது நல்ல முறையில் வளர்ந்து முதிர்ச்சிடைந்துள்ளதால் அந்த 6 மஞ்சள் அனகோண்டா பாம்புகள் பொதுமக்கள் பார்வைக்காக சமீபத்தில் விடப்பட்டது. வித்தியாசமாக உள்ள மஞ்சள் நிற அனகோண்டா பாம்பு அதனுடைய இருப்பிடத்தில் உள்ள பாறைகள் மற்றும் மரக்கிளைகள் மீது ஊர்ந்து செல்லும் காட்சிகளை பூங்காவுக்கு வரும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் ரசித்து பார்த்து செல்கின்றனர். இந்த மஞ்சள் நிற அனகோண்டா பாம்புகள் சுமார் 6 அடி முதல் 7 அடி வரை வளரும் தன்மை கொண்டது. பூங்காவில் தற்போது இதற்கு உணவாக சிறிய கோழி குஞ்சுகள் வழங்கப்படுகிறது.